புத்ராஜெயா, டிச. 19- கூட்டு ஆணையத்தை அமைப்பதன் வாயிலாக இரு
தரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான கடப்பாட்டை
மலேசியாவும் துர்க்மேனிஸ்தானும் நேற்று மறு உறுதிப்படுத்தின.
ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு ஏதுவாக இரு நாடுகளின் வெளியுறவு
அமைச்சர்களும் இந்த முன்னெடுப்பை அடுத்தாண்டு தொடக்கத்தில்
அமல்படுத்துவர் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இரு நாடுகளுக்கும் இடையே ஆணையத்தை அமைப்பதன் மூலம்
ஒத்துழைப்பின் அளவை மேலும் உயர்த்துவதற்கு நாங்கள் கடப்பாடு
கொண்டுள்ளோம். இந்த ஒத்துழைப்பு தொடர்பான விவகாரங்கள் மீது இரு
நாடுகளின் வெளிறவு அமைச்சர்களும் அடுத்தாண்டு தொடக்கத்தில்
கவனம் செலுத்தத் தொடங்குவர் என்று அவர் சொன்னார்.
இன்று இங்கு துர்க்மேனிஸ்தான் அதிபர் சர்தார் பெர்டிமுஹாமேடோவுடன்
நடத்திய கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேம்பாடு மீதான துர்க்மேனிஸ்தான் அதிபரின் விரிவான தொலைநோக்கு
குறித்தும் அவர் பாராட்டுத் தெரிவித்தார்.
வர்த்தகம் மற்றும் முதலீட்டில் மட்டும் துர்க்மேனிஸ்தான் அதிபர்
முக்கியத்துவம் காட்டவில்லை. மாறாக, கலாச்சாரம், அனைத்துலக
அமைதி உள்ளிட்ட விவகாரங்களிலும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தும்
அவரின் நோக்கம் குறித்து நாங்கள் பெரிமிதம் கொள்வதோடு அதனை
முழுமையாகவும் ஆதரிக்கிறோம் என்றார் அவர்.
மலேசியாவுக்கு இரண்டு நாள் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டுள்ள
பெர்டிமுஹாமேடோவ்வுக்கு முன்னதாக, பெர்டானா புத்ரா வளாகத்தில்
அதிகாரப்பூர்வ வரவேற்பு நல்கப்பட்டது.
இதனிடையே, போக்குவரத்து, கலாச்சாரம், கல்வி, சுற்றுலா, விளையாட்டு
உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் அவசியத்தை
இரு தலைவர்களும் கூட்டறிக்கை ஒன்றில் வலியுறுத்தினர்.


