(ஆர்.ராஜா)
ரவாங், டிச. 19- பிறந்தது முதல் இருதய நோயினால் அவதியுற்று வந்த எட்டு வயது பாலகனின் உயிரைக் காப்பதில் மாநில அரசின் மருத்துவ நிதியுதவித் திட்டம் பெரிதும் உதவியுள்ளது.
ரவாங், கன்றி ஹோம்ஸ் பகுதியைச் சேர்ந்த முகமது டேனிஷ் என்ற அச்சிறுவனுக்கு
இருதயத்தில் நான்கு வால்வுகளுக்குப் பதிலாக மூன்று வால்வுகள் மட்டுமே இருந்தது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து
அவருக்கு மொத்தம் மூன்று இருதய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவரின் தாயார் மாயா சாரி தேவி (வயது 48) கூறினார்.
இதில் இரு அறுவை சிகிச்சைகளுக்கு தேவையான நிதியில் 70,000 வெள்ளி மாநில அரசின் செல்கேர் இருதய சிகிச்சை நிதித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.
டேனிஷ் பிறக்கும் போதே அவருக்கு இருதய பாதிப்பு இருந்தது. செலாயாங் மருத்துவமனை மருத்துவர்கள் வழங்கிய ஆலோசனையின் பேரில் டேனிஷை நாங்கள் ஜ.ஜே.என்.னில் சேர்த்தோம். முதலாவது அறுவைச் சிகிச்சை மூன்று மாதக் குழந்தையாக இருந்த போது மேற்கொள்ளப்பட்டது. இதற்கு உண்டான 70,000 வெள்ளி செலவை ஐ.ஜே.என். ஏற்றுக்கொண்டது.
கடந்த 2018ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது அறுவை சிகிச்சைக்கு 20,000 வெள்ளியும் இவ்வாண்டு ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது அறுவை சிகிச்சைக்கு 50,000 வெள்ளியும் சிலாங்கூர் அரசின் செல்கேர் மேனேஜ்மெண்ட் பெர்ஹாட் நிறுவனத்தின் சிலாங்கூர் இருதய சிகிச்சை உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டன என அவர் குறிப்பிட்டார்.
அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு முன் டேனிஷ் சிறிது தொலைவு நடந்தாலும் மூச்சு வாங்கும். படிகள் ஏற சிரமப்படுவார். ஆனால் இப்போது சுறுசுறுப்புடன் காணப்படுவதோடு மூச்சிறைப்பும் குறைந்துள்ளது.
மருத்துவ சிகிச்சைக்கு தேவையான நிதி செல்கேர் வாயிலாக கிடைப்பதற்கு உதவிய மாநில அரசுக்கும் ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவாவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இதனிடையே, மாநில அரசின் செல்கேர் இருதய சிகிச்சை உதவித் திட்டத்தின் வாயிலாக டேனியலின் சிகிச்சைக்கு நிதியுதவி வழங்கப்பட்டதாக ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் கூறினார்.
முதலில 45,000 வெள்ளிக்கு மட்டும் அவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். எனினும், தொடர் சிகிச்சை மற்றும் மருந்துகளை வாங்குவது உள்ளிட்ட நோக்கங்களுக்காக மாநில அரசு கூடுதலாக 5,000 வெள்ளியைச் சேர்த்து 50,000 வெள்ளியை வழங்கியது என அவர் சொன்னார்.
சிகிச்சைக்குப் பின்னர் டேனிஷின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் சொன்னார்.
மாநில அரசின் சிலாங்கூர் பென்யாயாங் முன்னெடுப்பு (ஐ.எஸ்.பி.) மற்றும் பி எஸ் எஸ். எனப்படும் பந்துவான் சிலாங்கூர் சேஹாட் திட்டங்கள் வாயிலாக மருத்துவ உதவித் திட்டங்களை பொதுமக்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


