ஷா ஆலம், டிச. 19- சிலாங்கூரிலுள்ள ஐந்து தோட்டங்களைச் சேர்ந்த
தொழிலாளர்களுக்காக பெஸ்தாரி ஜெயாவில் ரெஸிடன்ஸி ராக்யாட்
(பி.ஆர்.ஆர்.) ஹர்மோனி மடாணி திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் 245
வீடுகளுக்கு தகுதி உள்ள தோட்டத் தொழிலாளர்களை அடையாளம்
காணும் பணியில் தாமும் தனது அலுவலமும் தலையிடவில்லை என
மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் வீ. பாப்பாராய்டு திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அந்த வீடுகளைப் பெறுவதற்கு தேவையான நிபந்தனைகளைப் பூர்த்தி
செய்த குடியிருப்பாளர்களின் பட்டியலைத் தயாரிக்கும் பணியில் நானோ
எனது ஆட்சிக்கு அலுவலகமோ சம்பந்தப்பட்டவில்லை. மாறாக, இப்பணி
மாநில அரசின் சார்பில் சிலாங்கூர் மாநில வீடமைப்பு மற்றும்
சொத்துடைமை வாரியம் (எல்.பி.எச்.எஸ்.) மற்றும் பெர்ஜெயா சிட்டி
நிறுவனம் ஆகிய தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று அவர்
சொன்னார்.
இந்த வீடமைப்புத் திட்டத்தில் வீடு வாங்குவதற்கு தகுதி உள்ளவர்களின்
பட்டியலைப் பரிசீலனை செய்வதற்காக கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் தேதி
பெர்ஜெயாசிட்டி, எல்.பி.எச்.எஸ் மற்றும் ஐந்து தோட்டங்களின் முன்னாள்
ஊழியர்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய கூட்டத்தை தமது அலுவலகம்
ஏற்பாடு செய்ததாகக் கூறிய அவர், அக்கூட்டத்தில் 69 தோட்டத்
தொழிலாளர்கள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட அனைத்து
நிபந்தனைகளையும் பூர்த்தி செய்துள்ளதாக கூறப்பட்டதை
சுட்டிக்காட்டினார்.
எஞ்சிய 176 தொழிலாளர்களும் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக (பெர்ஜெயா
சிட்டி அந்த தோட்டத்தை 2015இல் எடுத்துக் கொண்டது முதல்) வேலை
செய்ததை உறுதிப்படுத்த அவர்களின் பெயர்களை பெர்ஜெயா சிட்டி
நிறுவனம் மாநில அரசு தலைமைச் செயலகம் மற்றும் எல்.பி.எச்.எஸ். அதிகாரிகளுடன் இணைந்து மறுபரிசீலனை செய்வது என முடிவெடுக்கப்பட்டது என பாப்பாராய்டு குறிப்பிட்டார்.
அந்த 176 பேரும் அந்த தோட்டங்களின் முன்னாள் தொழிலாளர்கள்
என்பதை நிரூபிப்பதற்கான ஆவணங்களை தாங்கள் சமர்ப்பிப்பதாக
அக்கூட்டத்தில் கலந்து கொண்ட தோட்டத் தொழிலாளர்களின்
பிரதிநிதிகளும் உறுதியளித்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆகவே, அந்த ஐந்து தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கான
வீடமைப்புத் திட்டத்தில் தகுதியான விண்ணப்பதாரர்களைத்
தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் நாங்கள் தலையிடவில்லை.
அரசியல்வாதிகள் மற்றும் சில தனிப்பட்ட நபர்களின் இடையூறு
காரணமாக தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை
அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மலிவான விளம்பரத்திற்காக
சிலர் புரியும் காரியங்கள் தோட்டப் பாட்டாளிகளுக்கு சொந்த வீடமைப்புத்
திட்டத்தை உருவாக்குவதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் தமது அலுவலகம்
மேற்கொள்ளும் முயற்சிக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சமும்
ஏற்பட்டுள்ளது அவர் குறிப்பிட்டார்.
சில தரப்பினர் வழங்கும் இனிப்பான வாக்குறுதிகளை நம்பி ஏமாந்து விட
வேண்டாம் என சம்பந்தப்பட்ட தோட்டங்களைச் சேர்ந்த முன்னாள்
தொழிலாளர்களை பாப்பாராய்டு கேட்டுக் கொண்டார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்ட அமலாக்கத்தில்
பாப்பாராய்டு அலுவலகம் தலையிடுவதோடு தொழிலாளர்கள் மத்தியில்
பிரிவினையை ஏற்படுத்தவும் முயல்வதாகக் கூறி புக்கிட் தாகார், மேரி
தோட்டம். நைகல் கார்டனர், சுங்கை திங்கி, மின்யாக் தோட்டம்
ஆகியவற்றைச் சேர்ந்த முன்னாள் தொழிலாளர்கள் சிலர் கோல குபு பாரு
போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் செய்திருந்தனர் என்பது
குறிப்பிடத்தக்கது.


