ஷா ஆலம், டிச. 19 - தங்கள் வசமுள்ள மாடுகளை எதிர்வரும் ஜனவரி 31ஆம்
தேதிக்குள் வேறு இடங்களுக்கு மாற்ற சபாக் பெர்ணம், எஸ்.டி. கத்ரி
தோட்டத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடும் அதன்
உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சாலையைப் பயன்படுத்துவோரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது
உள்பட பல்வேறு பாதுகாப்பு பிரச்சினைகள் எழும் காரணத்தால் அங்குள்ள
1,000க்கும் மேற்பட்ட மாடுகளை இட மாற்றம் செய்தவற்கு உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கிராம மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் டத்தோ ரிஸாம் இஸ்மாயில் கூறினார்.
இப்பகுதியில் சுற்றித் திரியும் மாடுகள் தொடர்பில் நாங்கள்
பொதுமக்களிடமிருந்து பல புகார்களைப் பெற்றுள்ளோம். இதனால்
உயிரிழப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதோடு சபாக் பெர்ணம், தெங்கு
அம்புவான் ஜெமஹா மருத்துவமனை வளாகத்திலும் அந்த கால்நடைகள்
அத்துமீறி நுழைந்துள்ளன என்றார் அவர்.
இவ்விவகாரம் தொடர்பில் நாங்கள் தோட்ட நிர்வாகத்திடம் பேச்சு
நடத்தினோம். கால்நடைகளைத் தோட்டத்தில் விடுவது தொடர்பில் எந்த
கொள்கையும் இல்லை என அவர்கள் தெரிவித்து விட்டனர்.
ஆகவே, பாதுகாப்பான வேறு இடத்திற்கு கால்நடைகளை மாற்ற அதன்
உரிமையாளர்களுக்கு உத்தரவிடும்படி தோட்ட நிர்வாகத்தை நாங்கள்
கேட்டுக் கொண்டோம் என்றார் அவர்.
நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளை கால் நடை வளர்ப்போர் பின்பற்ற
வேண்டும் என்பதோடு அவற்றை வளர்ப்பதில் முறையாகச்
செயல்படும்படியும் அவர் கால்நடை உரிமையாளர்களை கேட்டுக்
கொண்டார்.
யாரும் கால்நடை வளர்ப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. மாறாக, அதே
சமயம் அந்த கால்நடைகளைப் முறையாகப் பராமரிப்பதிலும் பொது
மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் அவர்கள் உரிய கவனம்
செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.


