கோத்தா பாரு, டிச. 19- நான்கு கார்கள் மற்றும் ஒரு டிரெய்லர் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் ஆசிரியர் பயிற்சிக் கழக ((ஐ.பி.ஜி.) மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததோடு மேலும் பத்து மாணவர்கள் காயமடைந்தனர்.
இக்கோரச் சம்பவம் குவா மூசாங்- கோல லிப்பிஸ் சாலையின் 16வது கிலோ மீட்டரில் நேற்று அதிகாலை 6.45 மணியளவில் நிகழ்ந்ததாக குவா மூசாங் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் சிக் சூ ஃபூ கூறினார்.
அந்த 11 மாணவர்களும் இரு பெரேடுவா அக்ஸியா, ஒரு புரோட்டோன் எக்ஸ் 50 மற்றும் ஒரு புரோட்டோன் சாகா கார்களில் கோலாலம்பூரிலிருந்து பெசுட்டில் உள்ள தங்கள் கல்லூரிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக அவர் சொன்னார்.
பகாங் மாநிலத்தின் கோல லிப்பிசில் இருந்து குவா மூசாங் நோக்கி சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த டிரெய்லர் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த நான்கு கார்களையும் மோதியதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த விபத்தில் புரோட்டோன் எக்ஸ் 50 காரின் ஓட்டுநர், இரு பயணிகள் காயமடைந்த வேளையில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மற்றொரு பயணி உயிரிழந்தார். புரோட்டோன் அக்ஸியா காரின் ஓட்டுநருக்கு தலையில் பலத்தக் காயம் ஏற்பட்ட வேளையில் இதர ஆறு பயணிகள் லேசான காயங்களுக்குள்ளாயினர் என்றார் அவர்.
கவனக் குறைவாக வாகனத்தைச் செலுத்தியதன் மூலம் உயிரிழப்புக்கு காரணமாக இருந்ததற்காக 28 வயதான அந்த லோரி ஓட்டுநருக்கு எதிராக 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் 41(1) வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் சொன்னார்.


