ஜோகூர் பாரு, டிச. 19 - ஜோகூர் மாநிலத்தில் வெள்ள நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை. இன்று காலை 8.00 மணி நிலவரப்படி 11 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட அனைவரும் சிகாமாட், கம்போங் பத்து பாடாக்கில் உள்ள சமூக மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கடந்த மாதம் 29ஆம் தேதி முதல் அந்த நிவாரண மையத்தில் தங்கியுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை செயல்குழு தலைவர டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி கூறினார்.
அவர்கள் வசிக்கும் கம்போங் செபராங் பத்து பாடோக் கிராமம் இன்னும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதே இதற்கு காரணமாகும் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இதனிடையே, மெர்சிங்கில் உள்ள சுங்கை பாயா டத்தோ ஆற்றில் நீர் மட்டம் அபாயக் கட்டத்தைக் கடந்து 2.47 மீட்டராகப் பதிவாகியுள்ளது.
ஜோகூர் பாரு, பொந்தியான், குளுவாங், கூலாய், ஆகிய மாவட்டங்களில் வானிலை இன்று காலை தெளிவாக இருக்கும். அதே சமயம் மூவார், பத்து பஹாட், கோத்தா திங்கி ஆகிய மாவட்டங்களில் மேகமூட்டமாக இருக்கும் வேளையில் மெர்சிங் மற்றும் சிகாமாட்டில் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.


