கோலாலம்பூர், டிச. 17: புஞ்சாக் ஆலம், சிலாங்கூரில் உள்ள மழலையர் பள்ளியில் 11 மாத ஆண் குழந்தையை துஷ்பிரயோகம் செய்து கொடுமைப்படுத்திய வழக்கை விசாரிக்க உள்ளூர் பெண் ஒருவர் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
மழலையர் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய 24 வயது பெண் சுங்கை பூலோ மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் மாலை 6.50 மணியளவில் கைது செய்யப்பட்டதாக சுங்கை பூலோ மாவட்ட காவல் துறைத் தலைவர் முகமட் ஹபீஸ் முகமச் நோர் தெரிவித்தார்.
"கடந்த சனிக்கிழமை,டிசம்பர் 13 ஆம் தேதி மாலை 6.15 மணியளவில் மழலையர் பள்ளியிலிருந்து அழைத்து சென்ற பிறகு மகனின் கன்னத்திலும் வலது காதிலும் காயங்கள் இருந்ததாக உள்ளூர் நபரிடமிருந்து காவல்துறைக்கு புகார் வந்தது.
மழலையர் பள்ளியில் உள்ள மேசையிலிருந்து தனது மகன் விழுந்ததால் காயங்கள் ஏற்பட்டதாக அப்பள்ளி நிர்வாகம் தெரிவித்ததாக,” முகமட் ஹபீஸ் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக மழலையர் பள்ளியில் பணிபுரிந்த சம்பந்தப்பட்ட பெண்ணின் செயல்களைக் காட்டும் சிசிடிவி கேமரா காட்சிகளையும் அவரது தரப்பு பெற்றதாகவும், இதுவரை நான்கு நபர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சந்தேகநபர் டிசம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சிறுவர் சட்டம் 2001 இன் பிரிவு 31 (1) (A) இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டது, என்றார்.
- பெர்னாமா


