புதுடில்லி, டிச. 17 - நாட்டின் வடக்கில் காற்றின் தரம் நேற்று மோசமடைந்த நிலையில் பள்ளிகளில் சில வகுப்புகளை ஹைப்ரிட் முறைக்கு மாற்றுமாறு இந்திய அரசு அறிவுறுத்தியது,
மேலும், ஊழியர்களுக்கான வேலை நேரத்தை மாற்றும்படியும் அரசு அலுவலகங்களை அது கேட்டுக் கொண்டதோடு டில்லி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகளையும் விதித்தது.
டெல்லியில் நேற்று காற்றின் தரம் "மிகவும் மோசமான" அளவில் பதிவானது நள்ளிரவு முதல் 24 மணி நேரத்தில் 379 என்ற அளவில் காற்றின் தரக் குறியீடு (ஏ.கியு.ஐ.) பதிவாகியுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியது.
இன்று ஏ.கியு.ஐ. அளவு 400க்கும் மேல் 'கடுமையான' அளவிற்கு மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மக்களின் உடலாரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் அதேவேளையில் ஏற்கனவே நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அஞ்சப்படுகிறது.
அமைதியான காற்று உட்பட மிகவும் சாதகமற்ற வானிலை உள்ளிட்ட நிலைமைகளை கருத்தில் கொண்டு இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்று தலைநகர் பிராந்தியத்தில் காற்றின் தரத்தை கையாளும் காற்று தர மேலாண்மை ஆணையம் தெரிவித்தது .
பள்ளிகளிகளில் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இயங்கலை மற்றும் நேரடி வகுப்புகளை உட்படுத்திய ஹைப்ரிட் முறையில் பாடங்களை நடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் அரசாங்க அலுவலக நேரத்தில் மாற்றத்தை தீர்மானிக்கவும் மத்திய அரசைக் அந்த ஆணையம் கேட்டுக் கொண்டது.
குளிர்ந்த காற்று மற்றும் குறைந்த வெப்பநிலை வாகன மாசுபாடு, கட்டுமான தூசி மற்றும் அருகிலுள்ள மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் உள்ள பண்ணைகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத தீயிடல் ஆகிய காரணங்களால் ஒவ்வொரு குளிர்காலத்திலும் வட இந்தியா கடுமையான காற்று மாசுபாட்டுடன் போராடுகிறது.


