கோலாலம்பூர், டிச. 17- பெர்லிஸ் மாநிலத்தின் பாடாங் பெசார் எல்லைப்
பகுதியில் உள்ள பாதுகாப்புப் படைகளின் பாதுகாப்புச் சாவடி அருகே
துப்பாக்கிச் சூடு நடத்திய இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை
போலீசார் உறுதிப்படுத்தினர்.
இருபத்தோரு மற்றும் 28 வயதுடைய அவ்விரு ஆடவர்களும்
தாய்லாந்திலுள்ள சொங்க்லாவில் கடந்த வெள்ளிக்கிழமை கைது
செய்யப்பட்டதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரசாருடின்
ஹூசேன் கூறினார்.
இம்மாதம் 12ஆம் தேதி காலை 10.28 மணியளவில் பொது தற்காப்புப்
படையின் இரு உறுப்பினர்கள் கெடா மற்றும் பெர்லிஸ் எல்லைப்
பகுதியில் ஓப்ஸ் தாரிங் வாவாசான் ரோந்து நடவடிக்கையை
மேற்கொண்டிருந்த போது தாய்லாந்து நாட்டின் பாதுகாப்பு வேலிப்
பகுதியிலிருந்து துப்பாக்கியால் சுடப்படும் சத்தத்தை கேட்டதாக அவர்
சொன்னார்.
உடனடியாக மறைவான இடத்தில் பதுங்கிய அந்த பாதுகாப்பு படை
உறுப்பினர்கள், இரு ஆடவர்கள் மோட்டார் சைக்கிளில் தாய்லாந்து பகுதி
நோக்கி விரைவதைக் கண்டனர்.
இந்த சம்பவத்தில் பாதுகாப்பு படை உறுப்பினர்களுக்கு காயம் ஏதும்
ஏற்படவில்லை என்று பெர்னாமாவுக்கு அளித்த பேட்டியில் ரசாருடின்
குறிப்பிட்டார்.
தாய்லாந்து நாட்டு எண் பதிவைக் கொண்ட சாம்பல் நிற ஸ்கூட்டரில்
சம்பவ இடத்திற்கு வந்த அவ்விரு ஆடவர்களும் கைத் துப்பாக்கியால்
மலேசிய எல்லைப் பகுதியை நோக்கி சுடுவதை அங்குள்ள கண்காணிப்பு
கேமராவில் பதிவான காட்சிகள் காட்டுகின்றன என்று அவர் சொன்னார்.
இந்த சம்பவம் தொடர்பான தகவல் தாய்லாந்து போலீசாருடன் பகிர்ந்து
கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து சம்பவம் நிகழ்ந்த மறுநாள் காலை 10.40
மணியளவில் சொங்க்லா நகரில் அவ்விரு சந்தேகப் பேர்வழிகளையும்
தாய்லாந்து போலீசார் கைது செய்தனர் என்றார் அவர்.


