கோலாலம்பூர், டிச. 16 - இவ்வாண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 6,747 நெல் விவசாயிகளுக்கு விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு 1 கோடியே 32 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளியை நிவாரண நிதியாக வழங்கியுள்ளதாக மேலவையில் இன்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த அக்டோபர் வரை தொகுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 12,800 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள நெல் வயல்களில் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் இழப்புகளை ஈடுசெய்ய இந்த உதவி நிதி வழங்கப்பட்டது என்று துணை அமைச்சர் டத்தோ ஆர்தர் ஜோசப் குருப் கூறினார்.
கிளந்தான், கெடா மற்றும் பெர்லிஸ் ஆகிய மாநிலங்கள் வெள்ளப் பேரிடரில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன.
நெல் பயிர் பேரிடர் நிதியின் வாயிலாக கடந்த 2023ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட மூன்று மாநிலங்களைச் சேர்ந்த 4,946 விவசாயிகளுக்கு உதவுவதற்காக 83 கோடியே 80 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டது. 7,400 ஹெக்டேர் வயல் பகுதிகளை அந்த பாதிப்பு உள்ளடக்கியிருந்தது என்று கேள்வி மற்றும் பதில் நேரத்தின் போது அவர் சொன்னார்.
அரசு வழங்கிய அந்த உதவித் தொகையின் மதிப்பு மற்றும் அந்நிதியினால் பயனடையும் விவசாயிகளின் எண்ணிக்கை தொடர்பில் செனட்டர் அப்துல் நசீர் இட்ரிஸ் எழுப்பிய துணைக் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
இவ்வாண்டு ஜூன் முதல் அக்டோபர் வரை ஏற்பட்ட வெள்ளத்தால் விவசாயிகளுக்கு உண்டான சேதத்தை மதிப்பிடுவதற்கு விவசாய அமைச்சு நாளை ஒரு கூட்டத்தை நடத்தும் என்று ஆர்தர் கூறினார்.
இதில் அந்த மூன்று மாநிலங்களும் உள்ளடங்கியுள்ளன. 5,817 விவசாயிகளுக்கு ஏற்பட்ட சேத மதிப்பு சுமார் 1 கோடியே 28 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளியாக இருக்கலாம் என மதிப்பிடுகிறோம். எனினும், வெள்ளம் பல கட்டங்களாக ஏற்பட்டுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
எனவே, நாங்கள் தரவைச் சேகரித்து சமீபத்திய வெள்ள அலையின் தாக்கத்தை மதிப்பிடும் பணியில் ஈடுபட்டுள்ளோம். சேதத்தின் அளவை முழுமையாக மதிப்பிடுவதற்கு வெள்ள நீர் குறையும் வரை நாம் அடிக்கடி காத்திருக்க வேண்டியிருக்கும் இதற்கு சிறிது காலப் ஆகலாம் அவர் மேலும் கூறினார்.


