புத்ராஜெயா, டிச. 16- பெந்தோங், லுராட் பிலுட் பகுதியில் இம்மாதம் 13ஆம்
தேதி மேற்கொள்ளப்பட்ட ஓப் லெஜாங் சோதனை நடவடிக்கையில்
இருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சிப்பாங் மாவட்டத்தில்
செயல்பட்டு வந்த மோட்டார் சைக்கிள் திருட்டுக் கும்பல்
முறியடிக்கப்பட்டது.
சிப்பாங் மாவட்ட குற்றபுலனாய்வுத் துறை உறுப்பினர்கள் லுரா பீலுட்
போலீஸ் நிலைய உறுப்பினர்களுடன் இணைந்து இரவு 11.30 மணியளவில்
மேற்கொண்ட சோதனையில் 21 மற்றும் 23 வயதுடைய அவ்விரு
ஆடவர்களும் கைது செய்யப்பட்டதாக சிப்பாங் மாவட்ட போலீஸ்
தலைவர் ஏசிபி நோர்ஹிஷாம் பஹாரும் கூறினார்.
இந்த சோதனை நடவடிக்கையில் மூன்று யமாஹா மோட்டார்
சைக்கிள்கள் ஒரு ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் இரு சாவிக்
கொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறிய அவர், இந்த கைது
நடவடிக்கையின் வாயிலாக சிப்பாங் மாவட்டத்தில் புகார்
செய்யப்பட்டிருந்த நான்கு மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்களுக்கு
தீர்வு காணப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது என்றார்.
பூட்டப்படாத மோட்டார் சைக்கிள்களை அவ்விடத்திலிருந்து பந்திங்,
லபோஹான் டாகாங்கிலுள் ஒரு வீட்டிற்கு கொண்டுச் சென்று அதன்
பூட்டுகளை மாற்றுவது இத்திருட்டுக் கும்பலின் பாணியாகும் என்றார்
அவர்.
இந்த திருட்டின் மூலம் கிடைக்கும் பணத்தை அக்கும்பல் போதைப்
பொருள் வாங்க பயன்படுத்தியது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய
வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கைதான இருவரும் குற்றவியல் சட்டத்தின் 379ஏ பிரிவின் கீழ்
விசாரணைக்காக கடந்த 14ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்களுக்குத்
தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் சொன்னார்.


