கோலாலம்பூர், டிச. 16- இவ்வாண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை 10
லட்சத்து 9 ஆயிரத்து 114 இந்திய சுற்றுப்பயணிகள் மலேசியாவுக்கு
வருகை புரிந்துள்ளனர். இதன் வழி அந்நாட்டிலிருந்து இவ்வாண்டு பத்து
லட்சம் சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் இலக்கை மலேசியா அடைந்து
விட்டது.
கடந்த 2019ஆம் ஆண்டு பெருந்தொற்றுக்கு பிந்தைய காலக்கட்டத்துடன்
ஒப்பிடுகையில் 47 விழுக்காட்டு சுற்றுப்பயணிகள் அதிகரிப்பையும்
கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 71.1 விழுக்காட்டு அதிகரிப்பையும் இந்த
எண்ணிக்கை புலப்படுத்துவதாக உள்ளது என்று சுற்றுலா, கலை மற்றும்
கலாசாரத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் கூறினார்.
இந்த அபரிமித அதிகரிப்பானது இந்திய சுற்றுப்பயணிகள் மத்தியில்
மலேசியா பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தளமாக விளங்குவதை
மெய்ப்பிக்கும் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2023ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இலவச விசா திட்டம் ஒரு
ஊக்குவிப்பாக அமைந்துள்ளதோடு மலேசியா வரும் இந்திய
சுற்றுப்பயணிகள் எண்ணிக்கையில் அபரிமித அதிகரிப்பை காண்பதற்கும்
வழி அமைத்துள்ளது. இது தவிர, இந்த திட்டம் சுற்றுலாத் துறையில்
புதிய வாய்ப்புகள் உருவாக்கம் காண்பதற்கும் அத்துறை வழக்கத்திற்கு
மாறாக வளர்ச்சியைப் பதிவு செய்வதற்கும் சாத்தியத்தை
ஏற்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்தார்.
இந்திய சுற்றுப்யணிகள் எண்ணிக்கை அபரிமித உயர்வு காண்பதற்கு இரு
நாடுகளுக்கம் இடையே இவ்வாண்டு விமான சேவைகள் அதிகரித்ததும்
காரணமாக அமைந்தது என்று டத்தோஸ்ரீ தியோங் கூறினார்.
தற்போது கோலாலம்பூரிலிருந்து மேற்கொள்ளப்படும் சேவைகள் தவிர்த்து
லங்காவி மற்றும் பினாங்கிற்கான இந்தியாவின் இண்டிகோ விமானச் சேவை உள்ளிட்ட பல புதிய சேவைகள் இம்மாதம் அறிமுகப்படுத்தப்பட்டத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்திய சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பானது வரும் 2026ஆம்
ஆண்டு அனுசரிக்கப்படவிருக்கும் மலேசியாவுக்கு வருகை தாருங்கள்
இயக்கத்தின் போது சிறந்த சுற்றுலா ஈர்ப்பு மையம் என்ற மலேசியாவின்
நிலையை வலுப்படுத்தும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.


