அலோர் ஸ்டார், டிச. 15- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழு மாநிலங்களில் கடந்த நவம்பர் 28 முதல் இம்மாதம் 11 வரை மேற்கொள்ளப்பட்ட துப்புரவு நடவடிக்கையின் போது எஸ்.டபள்யூ. கோர்ப் எனப்படும் திடக்கழிவு மற்றும் பொது துப்புரவு மேலாண்மை கழகம் 12,800 டன் குப்பைகளை அகற்றியுள்ளது.
கெடா, பெர்லிஸ், பகாங், ஜோகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயா ஆகிய மாநிலங்களிலுள்ள 45 பகுதிகளில் இந்த துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டதாக வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை துணையமைச்சர் டத்தோ அய்மான் அதிரா சாபு கூறினார்.
சட்டம் 672 பயன்பாட்டில் உள்ள மாநிலங்களில் துப்புரவுப் பணிகளை நிறைவு செய்ய டிசம்பர் 20ஆம் தேதி வரை நாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளோம். இரண்டாம் வெள்ள அலை ஏற்படாமலிருக்க இறைவனை வேண்டிக் கொள்கிறோம் என அவர் சொன்னார்.
இந்த துப்புரவு இயக்கத்தின் போது 153 தொழிலாளர்களும் 362 இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டதாகக் கூறிய அவர், மொத்தம் 12,852 டன் குப்பைகள் அகற்றப்பட்டன என்றார்.
இங்குள்ள தாமான் அமானில் மேற்கொள்ளப்பட்ட வெள்ளத்திற்குப் பிந்தைய துப்புரவுப் பணிகளைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இதனிடையே, கெடா மாநிலத்தில் அலோர் ஸ்டார் மற்றும் குபாங் பாசு உள்ளிட்ட 19 இடங்களிலிருந்து 730.03 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு ஜாபு குப்பை அகற்றும் மையத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டன என்று அய்மான் அதிரா கூறினார்.


