புத்ராஜெயா, டிச 15- சைபர்ஜெயாவில் உள்ள ஒரு மாடி வீட்டில் காவல் துறையினர் நேற்று நடத்திய சோதனையில் கஞ்சா வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் உள்ளூர் பிரபலம் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அந்த 42 வயது நபர் சிப்பாங் மாவட்ட காவல்துறைத் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த குழுவினரால் நேற்று மாலை 3.10 மணியளவில் கைது செய்யப்பட்டதாக சிப்பாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி நோர்ஹிஷாம் பஹாபமான் தெரிவித்தார்.
அவரது வீட்டை சோதனை செய்ததில் இரண்டு பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒவ்வொன்றிலும் கஞ்சா வகை போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் உலர்ந்த இலைகள் இருந்தன என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறினார்.
கஞ்சா எனச் சந்தேகிக்கப்படும் அந்த போதைப்பொருளின் மொத்த எடை 60.3 கிராம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அந்நபரிடம் நடத்தப்பட்ட சிறுநீர் சோதனையில் அவர் டெட்ராஹைட்ரோகன்னாபினோல் போதைப் பொருளை (டி.எச்.சி.) பயன்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டது என்று அவர் சொன்னார்.
கைதான நபருக்கு முந்தைய குற்றப் பதிவு எதுவும் இல்லை. 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் 39ஏ(2) பிரிவின் கீழ் இச்சம்பவம் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.


