கோலாலம்பூர், டிச. 13- இன்று காலை 8.00 மணி நிலவரப்படி நான்கு மாநிலங்களில் உள்ள ஒன்பது வெள்ள நிவாரண மையங்களில் 433 பேர் இன்னும் தங்கியுள்ளனர்.
திரங்கானு
திரங்கானு மாநிலத்தில் வெள்ள நிலைமை சீரடைந்து வருவதாக மாநில பேரிடர் மேலாண்மை செயல் குழு செயலகம் கூறியது. கெமமான் மாவட்டத்தில் நேற்றிரவு 91 ஆக இருந்த வெள்ள அகதிகள் எண்ணிக்கை இன்று காலை 80 பேராக குறைந்துள்ளதாக அது தெரிவித்தது. அவர்கள் அனைவரும் கெர்த்தே, கம்போங் பாரு தேசிய பள்ளி மற்றும் பாடாங் கெமுந்திங் பாலாய் ராயா ஆகிய இடங்களில் உள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
பேராக்
பேராக் தெங்கா மற்றும் மஞ்சோங் மாவட்டங்களில் செயல்படும் இரு வெள்ள துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து 220 பேராக இருந்து வருவதாக மாநில பேரிடர் மேலாண்மை செயல் குழு செயலகம் கூறியது.
பேராக் தெங்கா தெலுக் கெப்பாயாங் தேசிய பள்ளியில் 34 பேரும் மஞ்சோங், பெருவாஸ் தேசியப் பள்ளியில் 186 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஜோகூர்
சிகாமாட் மாவட்டத்தில் உள்ள இரு வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளவர்கள் எண்ணிக்கை 85 பேராக உள்ளது. அவர்கள் அனைவரும் கம்போங் பத்து பாடோக் சமூக மண்டபம் மற்றும் கம்போங் தாசேக் சமூக மண்டபத்தில் தங்கியுள்ளனர்.
பகாங்
பெரா மற்றும் தெமர்லோவில் செயல்படும் நான்கு வெள்ள நிவாரண மையங்களில் 47 பேர் அடைக்கலம் நாடியுள்ளதாக மாநில சமூக நலத் துறையின் பேரிடர் தகவல் செயலி கூறியது.


