ஈப்போ, டிச. 13- பந்தாய் தெலுக் பாத்தேக் பகுதியில் நேற்று முதலை ஒன்று தென்பட்டதைத் தொடர்ந்து பேராக் மாநில வன விலங்கு மற்றும் தேசிய பூங்காத் துறை (பெரிஹிலித்தான்) அப்பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.
அந்த முதலையை பிடிப்பதற்கு அப்பகுதியில் பொறி எதுவும் அமைக்கப்படவில்லை எனக் கூறிய பேராக் மாநில பெர்ஹிலித்தான் இயக்குநர் யூசுப் ஷரிப், எனினும், சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.
நாங்கள் தற்போது கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறோம். நாங்கள் எல்லா இடங்களிலும் பொறிகளை வைப்பதில்லை. காரணம் சம்பந்தப்பட்ட இடம் உயிரினங்களின் வாழ்விடம் ஆகும். ஆகவே, விழிப்புடன் இருக்கும் படி பொது மக்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
முதலை மீது பொருட்களை எறிவதன் மூலம் சின மூட்டும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று அவர் கூறினார். அந்த முதலை வழி தவறி கடற்கரைக்கு வந்திருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம். ஆகவே, இரண்டு அல்லது மூன்று தினங்களில் அது தனது வாழ்விடத்திற்கு திரும்பி விடும் என எதிர் பார்க்கிறோம் என்றார் அவர்.
தெலுக் ருபியாவில் வேல் மினரல் (மலேசியா) சென். பெர்ஹாட் நிறுவனத்திற்குச் சொந்தமான படகுத் துறை அருகே நேற்று பிற்பகல் 2.24 மணியளவில் முதலை ஒன்ற தென்பட்டதை சித்தரிக்கும் காணொளி தொடர்பான தகவலைத் தாங்கள் பெற்றதாக மலேசிய பொது தற்காப்பு படையின் (ஏ.பி.எம்.) ரோந்துப் பிரிவு நேற்று கூறியிருந்தது.
இந்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட ஏ.பி.எம். அங்கு முதலை இருப்பதை உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து பெர்ஹிலித்தான் அங்கு கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது.


