NATIONAL

வெள்ள நிவாரணப் பணிகளுக்கு நான்கு நிறுவனங்கள் நன்கொடை-   பிரதமர் நன்றி

13 டிசம்பர் 2024, 3:20 AM
வெள்ள நிவாரணப் பணிகளுக்கு நான்கு நிறுவனங்கள் நன்கொடை-   பிரதமர் நன்றி

கோலாலம்பூர், டிசம்பர் 13 - தற்போது நடைபெற்று வரும் வெள்ள நிவாரண மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ள  டானா எஹ்சான் மடாணி நிதிக்கு மெக்சிஸ், ஆஸ்ட்ரோ, பூமி அர்மாடா மற்றும் மியாசாட் ஆகிய நான்கு நிறுவனங்கள் 50 லட்சம் வெள்ளியை நன்கொடையாக வழங்கியுள்ளது.

தனது முகநூல் பதிவில் இந்த தகவலை வெளியிட்ட பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்,  பல்வேறு மனிதாபிமான முயற்சிகள் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவுவதில் இந்த அமைப்புகள் வகிக்கும்  முக்கிய பங்கை எடுத்துரைத்தார்.

இந்தப் பங்களிப்பு  இறைவன் அருளால் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைக்கட்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், ஆஸ்ட்ரோ மலேசியா பெர்ஹாட் தலைவர் துங்கு அலி ரித்தாவுடின் துவாங்கு முஹ்ரிஸ், பூமி அர்மாடா தலைவர் ராஜா டான் ஸ்ரீ அர்ஷத் ராஜா துன் ஊடா, மெக்சிஸ் இடைக்காலத் தலைவர் டத்தோ ஹமிடா நஜியாடின், மெக்சிஸ் தலைமை செயல் அதிகாரி கோ சியு ஹெங், மியாசாட் இயக்குநர் ஷாருள் ரெஸ்சா ஹசான் ஆகியோர் பிரதமர்  அன்வாரிடம் இந்த பங்களிப்பை வழங்கியதாக ஒரு கூட்டறிக்கையில் அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இந்த நிவாரண நிதிக்கு

மெக்சிஸ் 20 லட்சம் வெள்ளியும் ஆஸ்ட்ரோ, பூமி அர்மாடா மற்றும் மியாசாட் ஆகிய நிறுவனங்கள் தலா 10 லட்சம் வெள்ளியும் வழங்கின.

மலேசியா முழுவதும், குறிப்பாக கிழக்குக் கரை மாநிலங்களில் அண்மையில்  ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில்  பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில்  கூட்டு நிதியுதவி வழங்கப்படுவதாக அந்த அறிக்கை கூறியது.

மேலும், ஒவ்வொரு அமைப்பும் பல்வேறு மனிதாபிமான முயற்சிகள் மூலம் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவ தனிப்பட்ட முறையில்  பங்கை ஆற்றி வருகின்றன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.