கோலாலம்பூர், டிச. 12 - பகாங் மாநிலத்தின் குவாந்தானில் உள்ள புக்கிட் கோவில் உத்தேச பாக்சைட் சுரங்கத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் விளைவு மதிப்பீடு (இ.ஐ.ஏ.) அறிக்கைக்கு எந்த ஒப்புதலும் வழங்கப்படவில்லை என்பதை இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமது உறுதிப்படுத்தியுள்ளார்.
அதே இடத்தில் அதே திட்டத்திற்கான முந்தைய இ.ஐ.ஏ. அறிக்கை நிராகரிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து பகாங், முக்கிம் கோல குவாந்தானில் 2,424.73 ஹெக்டேர் பரப்பளவில் 'புக்கிட் கோவில் முன்மொழியப்பட்ட பாக்சைட் சுரங்க நடவடிக்கை' என்ற பெயரில் உத்தேசத் திட்டத்திற்கான மற்றொரு விண்ணப்பத்தை சுற்றுச்சூழல் துறை தலைமையகம் கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி பெற்றது என அவர் தெரிவித்தார்.
மக்களவையில் இன்று புக்கிட் கோ பாக்சைட் சுரங்கத் திட்டத்திற்கான இ.ஐ.ஏ. ஒப்புதல் நிலை குறித்து குபாங் கிரியான் உறுப்பினர் டத்தோஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
பொதுவாக, அனைத்து இ.ஐ.ஏ. அறிக்கைகளும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு தொழில்நுட்ப மறுஆய்வுக் குழுவால் முழுமையாக மதிப்பீடு செய்யப்பட்டு விவாதிக்கப்படுகின்றன. இதில் மத்திய மற்றும் மாநில அளவிலான தொழில்நுட்ப நிறுவனங்கள், நியமிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவை தரப்பினரின் பங்கேற்பும் அடங்கும் என்று நிக் அகமது சொன்னார்.
சமர்ப்பிக்கப்பட்ட இ.ஐ.ஏ. அறிக்கையின் மீது முடிவெடுப்பதற்கு முன், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு தொழில்நுட்ப மறுஆய்வுக் குழு பங்களிப்பாளர்களிடமிருந்து அனைத்து கருத்துகளையும் பரிந்துரைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.
இ.ஐ.ஏ. செயல்முறையின் செயல்திறனை மேம்படுத்த அரசாங்கம் ஐந்து முன்னுரிமைகளை கோடிட்டுக் காட்டியுள்ளது. சட்டத் தேவைகளை வலுப்படுத்துதல், இ.ஐ.ஏ. மதிப்பீடுகளில் நிர்வாகத்தை மேம்படுத்துதல், இ.ஐ.ஏ. நடைமுறைகளை மேம்படுத்துதல், இ.ஐ.ஏ. செயல்முறையை இலக்கவியல் மயமாக்குதல், வலுவான பொது ஈடுபாட்டை வளர்த்தல் மற்றும் இ.ஐ.ஏ. அமலாக்கத்தை மேம்படுத்துதல் ஆகியவையே அந்த ஐந்து முன்னுரிமைகளாகும்.


