கோலாலம்பூர், டிச. 12- ஊழியர் சேம நிதி வாரியத்தில் (இ.பி.எஃப்.) உள்ள
55 வயதுக்கும் கீழ்ப்பட்ட சந்தாதாரர்களில் 41 லட்சம் பேர் அல்லது 31.6
விழுக்காட்டினர் இலகு கணக்கிற்கு தொடக்க நிதியாக 1,450 கோடி
வெள்ளியை மாற்றியுள்ளனர்.
மேலும், சேமிப்புத் தொகையிலிருந்து 66 லட்சம் வெள்ளி ஓய்வுகால
கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாக இரண்டாவது நிதியமைச்சர் டத்டதோஸ்ரீ
அமீர் ஹம்சா கூறினார்.
இவ்வாண்டு நவம்பர் 27ஆம் தேதி வரை மொத்த இ.பி.எஃப்.
உறுப்பினர்களில் நாற்பது லட்சம் பேர் அல்லது 30.5 விழுக்காட்டினர் இலகு
கணக்கு வாயிலாக மொத்தம் 1,160 கோடி வெள்ளியை மீட்டுள்ளனர் என்று
அவர் சொன்னார்.
இவ்வாண்டு நவம்பர் மாதம் வரை இலக்கு கணக்கில் வைக்கப்பட்டுள்ள
எஞ்சிய சேமிப்புத் தொகை 740 கோடி வெள்ளியாகும் என மேலவையில்
இன்று அவர் தெரிவித்தார்.
இ.பி.எஃப். முதலாவது கணக்கிலிருந்து மூன்றாவது கணக்கிற்கு சேமிப்பை
மாற்றியவர்கள் எண்ணிக்கை மற்றும் மூன்றாவது கணக்கிலிருந்து
பணத்தை மீட்டவர்கள் எண்ணிக்கை குறித்து செனட்டர் டத்தோ போபி ஆ
ஃபாங் சுயேன் கேள்வியெழுப்பியிருந்தார்.
இவ்வாண்டு இலகு கணக்கிலிருந்து மீட்கப்பட்ட தொகையின்
அடிப்படையில் பார்க்கையில் எதிர்காலத்தில் மீட்கப்படும் தொகை
ஆண்டுக்கு 500 கோடி முதல் 700 கோடி வரை இருக்கும் என
மதிப்பிடப்படுவதாக அவர் சொன்னார்.
ஆண்டுக்கு 10,000 முதல் 12,000 கோடி வெள்ளி வரை அதிகரித்து
இ.பி.எஃப்.பின் வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் மீட்கப்படும் இந்த
தொகையின் மதிப்பு குறைவானதாகும் என அவர் தெரிவித்தார்.
செனட்டர் டத்தோ ஏ.கேசவதாஸ் எழுப்பிய துணைக் கேள்விக்கு
பதிலளித்த அமீர், மரபு ரீதியான சேமிப்பிலிருந்து ஷரியா சேமிப்புக்கு
பணத்தை மாற்றுவதற்கான விதிமுறைகளை மறு ஆய்வு செய்ய
இ.பி.எஃப். தயாராக உள்ளதாக குறிப்பிட்டார்.


