வாஷிங்டன், டிச. 12 - அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டோனால்ட் டிரம்ப், அடுத்த மாதம் நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில் பங்கேற்க சீன அதிபர் ஜி ஜின் பிங்கிற்கு அழைத்துள்ளதாக சி.பி.எஸ். செய்தி நிறுவனம் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி 20 ஆம் தேதி வாஷிங்டனில் நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவிற்கான அழைப்பு நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலுக்குப் பிறகு அனுப்பப்பட்டது.
எனினும், அந்த அழைப்பு அது ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று அச்செய்தி நிறுவனம் தெரிவித்தது. இதன் தொடர்பான கேள்விக்கு வாஷிங்டனில் உள்ள சீன தூதரகம் உடனடியாகப் பதிலளிக்கவில்லை.
கடந்த வெள்ளிக்கிழமை என்.பி.சி. நியூஸ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ட்ரம்ப், அதிபர் ஜீயுடனான நட்பு நன்றாக இருப்பதாகவும் அண்மையில் அதாவது இந்த வாரம்கூட அவருடன் உரையாடியதாகவும் கூறினார்.
அமெரிக்காவின் புவிசார் அரசியலில் முதன்மை வைரியான சீனாவின் தலைவர் ஒருவர் அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வது எதிர்பாராத ஒரு நிகழ்வாக இருக்கும.
அதிதீவிர போதைப்பொருளான ஃபெண்டானிலின் கடத்தலை நிறுத்த பெய்ஜிங் கூடுதல் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சீனப் பொருட்களுக்கு 10 சதவீத கூடுதல் வரி விதிக்கப் போவதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
அதே சமயம், சீனப் பொருட்களுக்கு 60 விழுக்காட்டிற்கும் அதிகமான வரி விதிக்கப்படும் என்றும் தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் அச்சுறுத்தினார்.


