NATIONAL

காஸாவில் மனிதாபிமான நெருக்கடி மோசமடைகிறது- ஐ.நா. தலையிட மலேசியா கோரிக்கை

12 டிசம்பர் 2024, 4:56 AM
காஸாவில் மனிதாபிமான நெருக்கடி மோசமடைகிறது- ஐ.நா. தலையிட மலேசியா கோரிக்கை

கோலாலம்பூர், டிச.  12- காஸா மற்றும் மேற்குக் கரையில் இஸ்ரேல் மேற்கொண்டு  இராணுவ நடவடிக்கைகளுக்கு  ஐக்கிய நாடுகள்  சபையின் 10வது அவசரகால சிறப்பு அமர்வில் கடும் கண்டனம் தெரிவித்த மலேசியா,  மனிதாபிமான நெருக்கடியைச் சமாளிக்க உறுதியான அனைத்துலகத் தலையீடு அவசியம் எனக் கோரிக்கை  விடுத்தது.

இந்த கூட்டத்தில், ஐ.நா. வுக்கான மலேசியாவின் நிரந்தரப் பிரதிநிதி டத்தோ டாக்டர் அகமது பைசல் முகமது,  காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலின் பேரழிவு விளைவுகளை கோடிட்டுக் காட்டி தனது உரையைத் தொடங்கினார்.

தாக்குதல் தொடங்கி 431 நாட்கள் கடந்துவிட்டன. இதன் விளைவாக 44,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அவர்களில்  பெரும்பாலோர் பெண்கள் மற்றும் சிறார்களாவர்.

மேலும், 105,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இதுதவிர,  2024 இல் மனிதாபிமானப் பணியாளர்களின் இறப்பு  அதிகபட்ச  எண்ணிக்கையை  பதிவுசெய்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பகுதிகளில் மட்டும் 178 பேர் கொல்லப்பட்டுள்ளனனர்.

காஸாவில் மனிதாபிமான நிலைமை நீண்ட காலமாக ஒரு 'பேரழிவு' என்று விவரிக்கப்படுகிறது. இருப்பினும், மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து தடுக்கப்படுகின்றன என்று அவர் தனது உரையில் கூறினார்.

கடந்த நவம்பர் மாதம் வடக்கு காஸாவில் முற்றுகையிடப்பட்ட பகுதிக்குள் நுழைய   ஐ.நா. 53 முறை முயற்சி மேற்கொண்ட  வேளையில்   அவற்றில் 48 முயற்சிகள் நிராகரிக்கப்பட்டன. இதர ஐந்து முயற்சிகள்  கடுமையாகத் தடுக்கப்பட்டன என்ற  மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் தகவலை  அகமது பைசால் தமதுரையில் சுட்டிக்காட்டினார்.

பாலஸ்தீனத்தில் 60 சதவீத கட்டிடங்கள் அழிக்கப்பட்டு அல்லது சேதப்படுத்தப்பட்ட நிலையில்   காஸா ஒரு "தரிசு பாலைவனமாக" காணப்படுகிறது என்று அவர் விவரித்தார்.

குண்டுவெடிப்புச் சம்பவங்களால்  கடுமையான நீண்டகால சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார அபாயங்கள் இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.

இதற்கிடையில், மேற்குக் கரையின் நிலைமையை விவரித்த  அகமது பைசால், இஸ்ரேலிய குடியேறிகளால் வன்முறை மற்றும் துன்புறுத்தல் அதிகரிப்பு, சட்டவிரோத குடியேற்றங்களின் விரிவாக்கம் மற்றும் பாலஸ்தீனிய வீடுகளை இடிப்பது போன்றவற்றை சம்பவங்கள் நிகழ்வதையும் சுட்டிக்காட்டினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.