NATIONAL

பணியின் போது லஞ்சத்தை நிராகரித்த காவல் துறையினருக்கு நற்சான்றிதழ்- ஐ.ஜி.பி. வழங்கினார்

12 டிசம்பர் 2024, 4:54 AM
பணியின் போது லஞ்சத்தை நிராகரித்த காவல் துறையினருக்கு நற்சான்றிதழ்- ஐ.ஜி.பி. வழங்கினார்

கோலாலம்பூர், டிச. 12 - கிளந்தான் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட  'ஒப் தாரிங் வாவாசான்' சோதனை நடவடிக்கையின் போது  வழங்கப்பட்ட லஞ்சத்தை   ஏற்க மறுத்த பொது நடவடிக்கைப் படையின் (பி.ஜி.ஏ.) தென்கிழக்கு படையின் ஐந்து அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேனிடமிருந்து பாராட்டுக் கடிதத்தைப் பெற்றனர்.

ஏ.எஸ்.பி. முகமது நோர்சாஹிருடின் ஜுஃப்ரி, இன்ஸ்பெக்டர் முகமது ஹனிப் அப்துல்  ஹலீம், சார்ஜண்ட் ஒஸ்மிசான் ஒஸ்மான், கார்ப்ரல் முகமது ஷரிபுடின் சுலைமான் மற்றும் கார்ப்ரல் வான் முகமது அப்பாசி வான் மாமாட் ஆகியோரே அந்த ஐந்து காவல் துறை அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களாவர் என்று அரச மலேசிய போலீஸ் முகநூல் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

நாட்டின் எல்லைகளைக் காக்கும் கடமையை மேற்கொள்ளும் போது எப்போதும்  உயர்நெறிக் கொள்கையை கடைபிடித்தற்காக அவர்களுக்கு ஐ.ஜி.பி.  வாழ்த்து தெரிவித்தார்.

அவர்கள் செய்த செயல்  (ஊழலை நிராகரிப்பது) காவல் படையின் சகாக்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். எனவே,  அரச மலேசிய காவல்துறையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் கண்ணியமற்ற செயல்களில் எளிதில் வீழ்ந்து தங்கள்  எதிர்காலத்தை வீணடித்துக் கொள்ளக்கூடாது என்று புக்கிட் அமானில்  நடைபெற்ற பாராட்டுக் கடிதம் வழங்கும் நிகழ்வில் அவர் கூறினார்.

உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு துறையின் செயல் இயக்குனர் டத்தோ முகமது சுஸ்ரின் முகமது ரோட்ஹி மற்றும் பி.ஜி.ஏ. தென்கிழக்கு படைப்பிரிவின் தளபதி டத்தோ நிக் ரோஸ் அசான் நிக் அப்துல் ஹமிட் ஆகியோரும் இந்நிகழ்வில்  கலந்து கொண்டனர்.

டிசம்பர் 9ஆம் தேதி  ஜாலான் ஸ்ரீ செமர்லாங் மற்றும் ஜாலான் பெசார் சுல்தான் இஸ்மாயில் பெட்ரா விமான நிலையம்  ஆகிய இடங்களில்  மேற்கொள்ளப்பட்ட 'ஒப் தாரிங் வாவாசன்' சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத அந்நியக் குடியேறிகளைக் கைது செய்யாமலிருப்பதற்காகக்  காவல்துறை உறுப்பினர்கள் மற்றும்  அதிகாரிகளுக்கு  இடைத் தரகர் ஒருவர் 50,000 வெள்ளி லஞ்சம் கொடுக்க முயன்றார். இந்த  நடவடிக்கையில்  16 சட்டவிரோத மியான்மார்  குடியேறியகளும் அவர்களை கொண்டு வந்த மூன்று நபர்களும்  கைது செய்யப்பட்டனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.