ஷா ஆலம், டிச. 12 - குண்டர் கும்பல்தனம் மற்றும் தங்கள் குழு மீது அதீத
பற்று கொண்ட ரசிகர்களிடமிருந்து கால்பந்து விளையாட்டாளர்கள்
காப்பாற்றப்பட வேண்டியதன் அவசியத்தை மேன்மை தங்கிய சிலாங்கூர்
சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் வலியுறுத்தினார்.
இந்த அதிதீவிர வன்முறை விளையாட்டாளர்களின் உயிர்
சம்பந்தப்பட்டதாகவும் உள்ளதாக சிலாங்கூர் கால்பந்து குழுவின்
புரவலருமான அவர் தெரிவித்தார்.
அண்மைய வன்முறைச் சம்பவங்கள் குறிப்பாக, சிலாங்கூர் கால்பந்து
விளையாட்டாளரான 26 வயதான ஃபைசால் ஹலிமுக்கு நான்கு டிகிரி
தீக்காயங்களைத் ஏற்படுத்திய எரிதிராவகத் தாக்குதல் குறித்து மேன்மை
தங்கிய சுல்தான் தனது கவலையை வெளிப்படுத்தினார்.
கடந்த மே மாதம் 5ஆம் தேதி பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பேரங்காடி
ஒன்றில் அடையாளம் தெரியாத நபர்களால் ஃபைசால் எரிதிராவகத்
தாக்குதலுக்கு ஆளானார்.
இந்த தாக்குதல் மிகவும் வெளிப்படையான சம்பவமாக இருந்த போதிலும்
இது வரை அதற்கு தீர்வு காணப்படாதது குறித்து தாம் மிகுந்த
ஏமாற்றமடைவதாக சுல்தான் குறிப்பிட்டார்.
சமூக ஊடகங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பம் நிறைந்த இந்த யுகத்தில்
யாரும் எதையும் மறைக்க முடியாது. இந்த சம்பவம் தொடர்பில் மாநில
சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களை நான் கவனித்து வந்ததோடு
இந்த வழக்கு விரைவில் தீர்க்கப்படும் எனவும் நம்புகிறேன் என்று அவர்
தெரிவித்தார்.
தனது ஒப்புதலின் பேரில் சேரிட்டி ஷீல்ட் கிண்ணப் போட்டியில்
பங்கேற்பதிலிருந்து சிலாங்கூர் எப்.சி.விலகிய நிலையில் அக்குழுவுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது குறித்தும் மிகுந்த சினம் கொண்டார்.


