கோலாலம்பூர், டிச. 12- கிளந்தான் மாநிலம் வெள்ளப் பாதிப்பிலிருந்து
நேற்றிரவு முழுமையாக மீண்டது. அதே சமயம் திரங்கானுவில்
நிலைமை சீரடைந்து வருகிறது.
கிளந்தான், குவா மூசாங், லீமாவ் கஸ்தூரி 1 தேசியப் பள்ளியில்
செயல்பட்டு வந்த கடைசி வெள்ள நிவாரண மையம் நேற்று மாலை 5.00
மணிக்கு மூடப்பட்டதாக மாவட்ட சமூக நலத் துறை அதிகாரி புன் தாம்
ஏஹ் கின் கூறினார். மொத்தம் 41 பேர் தங்கியிருந்த இந்த மையம்
இரண்டாவது வெள்ள அலையின் பாதிப்பு தணிந்ததைத் தொடர்ந்து
மூடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் முழுமையாக வடிந்ததைத் தொடர்ந்து
இம்மையத்தில் தங்கியிருந்த அனைவரும் நேற்று மாலை 5.00
மணியளவில் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர் என்று அவர்
குறிப்பிட்டார்.
திரங்கானு மாநிலத்தில் வெள்ள நிலைமை தற்போது சீரடைந்து வருகிறது.
இங்கு செயல்படும் 12 நிவாரண மையங்கள்ல் 869 குடும்பங்களைச் சேர்ந்த
3,778 பேர் துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர்.
கெமமான் மாவட்டத்தில் உள்ள எட்டு நிவாரண மையங்களில் 812
குடும்பங்களைச் சேர்ந்த 3,541 பேர் தங்கியுள்ள நிலையில் டுங்குன்
மாவட்டத்தில் உள்ள நான்கு மையங்களில் 57 குடும்பங்களைச் சேர்ந்த 237
அடைக்கலம் நாடியுள்ளனர்.
பேராக் மாநிலத்தைப் பொறுத்த வரை 11 குடும்பங்களைச் சேர்ந்த 34 பேர்
தொடர்ந்து நிவாரண மையத்தில் தங்கியுள்ளதாக மாநில பேரிடர்
மேலாண்மைக் குழு செயலகம் கூறியது.
ஜோகூர் மாநிலத்தின் தங்காக் மற்றும் சிகாமாட் ஆகிய மாவட்டங்களில்
திறக்கப்பட்டுள்ள மூன்று தற்காலிக நிவாரண மையங்களில் 38 குடும்பங்களைச் சேர்ந்த 139 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி கூறினார்.


