மலாக்கா, டிச. 11- நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் 470.33 கிராம் கஞ்சாவை கடத்திய குற்றத்திற்கு முன்னாள் வேன் ஓட்டுநர் ஒருவருக்கு இங்குள்ள உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
அரசுத் தரப்பின் விசாரணையின் முடிவில் நியாயமான சந்தேகங்களை எதிர்த்தரப்பு எழுப்பத் தவறியதைத் தொடர்ந்து ரம்லான் முகமது சாலே (வயது 56) என்ற அந்த ஆடவருக்கு நீதிபதி டத்தோ முகமது ராட்ஸி அப்துல் ஹிமிட் இந்த தண்டனையை வழங்கினார்.
குற்றஞ்சாட்டப் பட்டவரின் காரை இரவலாகப் பெற்றதாக கூறப்படும் ஷாபிக் என்பவரை எதிர்த்தரப்பு சாட்சியாக அழைக்கத் தவறி விட்டதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.
சம்பந்தப்பட்ட காரை யார் பயன்படுத்தியது மற்றும் தாம் கைது செய்யப்பட்ட சூழ்நிலை தொடர்பில் குற்றஞ் சாட்டப்பட்டவர் அளித்த சாட்சியம், அரசுத் தரப்பு சாட்சியங்களுடன் ஒத்து போகவில்லை. ஆகவே விசாரணையின் முடிவில் நியாயமான சந்தேகங்களை எதிர்த்தரப்பு வழக்கறிஞர் எழுப்பத் தவறிவிட்டார் என நீதிபதி குறிப்பிட்டார்.
கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி மாலை 6.00 மணியளவில் மலாக்கா தெங்கா மாவட்டத்திலுள்ள தாமான் செங் ஜெயாவில் கார் ஒன்றில் கஞ்சாவை கடத்தியதாக மற்றொரு நபருடன் ரம்லான் குற்றஞ் சாட்டப்பட்டிருந்தார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை, மரண தண்டனை விதிக்கப் படாத பட்சத்தில் ஆயுள் தண்டனை மற்றும் 15க்கும் குறையாத பிரம்படி வழங்க வகை செய்யும் 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் 39பி(1)(ஏ) பிரிவின் கீழ் அவருக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டிருந்தது.
அரசுத் தரப்பில் நோர் அஜிசா யூசோ வழக்கை நடத்திய வேளையில் குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில் டத்தோ ஹனிப் ஹசான் ஆஜரானார்.
இந்த வழக்கில் அரசுத் தரப்பு பத்து சாட்சிகளை அழைத்து வந்த வேளையில் எதிர்த்தரப்பு சார்பில் ஒரே சாட்சி ஆஜரானார்.


