புதுடில்லி, டிச 11- நாடாளுமன்ற மேலவைத் தலைவர் என்ற முறையில் பாகுபாடாக நடந்து கொள்வதாகக் கூறி இந்திய துணையதிபர் ஜக்டீப் டான்கருக்கு எதிராக பதவி பறிப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ளன. இந்திய அரசியல் வரலாற்றில் இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்படுவது இதுவே முதன் முறையாகும்.
இவ்விவகாரம் தொடர்பில் கருத்து பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு டான்கர் அலுவலகம் பதிலளிக்கவில்லை. எனினும், டான்கர் தொழில் நிபுணத்துவம் கொண்டவர் என்பதோடு பாகுபாடின்றியும் செயல்படக் கூடியவர் என்று நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ கூறினார்.
நாடாளுமன்றம் செயல்படாத சூழலை ஏற்படுத்துவதாக ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் ஒன்றை மற்றொன்று குற்றஞ்சாட்டிக் கொண்டு அவை நடவடிக்கைகளை பல வாரங்களாக முடக்கி வைத்துள்ள நிலையில் இந்த பதவி பறிப்புத் தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய அரசியலமைப்பு பதவியை துணையதிபர் வகித்து வருகிறார். அதே சமயம், நாடாளுமன்ற மேல் சபையின் தலைவராகவும் அவர் இருந்து வருகிறார். மேலும், அதிபர் பதவி காலியாகும் பட்சத்தில் நாட்டின் அதிபராகவும் அவர் பதவி வகிப்பார்.
துணையதிபரை பதவி நீக்கம் செய்வதற்கு போதுமான ஆதரவு இல்லாததால் இந்த பதவி பறிப்புத் தீர்மானம் வெறும் சடங்குப்பூர்வ நிகழ்வாக மட்டுமே கருதப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் பாரதீய ஜனதாக கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக டான்கர் விளங்குவதால் இந்த பதவி பறிப்புத் தீர்மானம் மோடி அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான விரிசலை மேலும் மோசமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


