கோலாலம்பூர், டிச. 11- இவ் வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் பல்வேறு பொருளாதாரத் துறைகளில் 25,470 வெள்ளி மதிப்பிலான அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகளை மலேசியா பதிவு செய்துள்ளது.
கடந்தாண்டு பதிவான 23,020 கோடி வெள்ளி முதலீட்டைக் காட்டிலும் இது 10.7 விழுக்காடு அதிகமாகும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
மொத்தம் 4,753 திட்டங்களை உள்ளடக்கிய இந்த முதலீடுகள் வாயிலாக 159,347 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.
இவ்வாண்டிற்கான எட்டாவது தேசிய முதலீட்டு மன்றக் (எம்.பி.என்.) கூட்டத்திற்கு நான் தலைமையேற்ற போது இந்த தகவல் எனக்கு வழங்கப்பட்டது என்று அவர் தனது எக்ஸ் தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
எரிசக்தி ஆக்கத் திறன் (பி.யு.இ.) மற்றும் நீர் பயனீட்டு செயல்திறன் (டபள்யு.யு.இ.) மெட்ரிக் முறையைக் கொண்டிருக்கும் நிலையான தரவு மைய மேம்பாட்டுக்கான வழிகாட்டியின் உருவாக்கத்திற்கு தாம் இசைவு தெரிவித்ததோடு ஒப்புதலும் வழங்கியதாக அவர் தெரிவித்தார்.
இலக்கவியல் சூழியல் ஊக்கத் திட்டத்தின் கீழ் வரிச் சலுகை பெறுவதற்கான தகுதியை நிர்ணயிக்கும் நிபந்தனையாக இந்த வழிகாட்டி பயன்படுத்தப்படும் என்று அவர் சொன்னார்.
நாட்டின் போட்டியிடும் ஆற்றலை மேம்படுத்துவதற்கு ஏதுவாக நடப்புக் கொள்கைகளைத் தரம் உயர்த்துவதிலும் புதிய கொள்கைகளை வரைவதிலும் அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் எனவும் அவர் கூறினார்.


