உலு டுங்குன், டிச. 11- வடகிழக்கு பருவமழையின் போது ஏற்பட்ட வெள்ளம் மற்றும் புயல் காரணமாக நாடு முழுவதும் 42 போலீஸ் நிலையங்கள் மற்றும் சாவடிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த சேதத்தின் விளைவாக அரச மலேசிய போலீஸ் படை 32 லட்சம் வெள்ளி இழப்பை எதிர்நோக்கியுள்ளதாக தேசிய போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஆயோப் கான் மைடின் பிச்சை கூறினார்.
இவற்றில் வெள்ளப் பாதிப்பில் மட்டும் 32 போலீஸ் நிலையங்கள் மற்றும் சாவடிகளுக்கு 25 லட்சம் வெள்ளி மதிப்பிலான தேசம் ஏற்பட்டது என்று அவர் சொன்னார்.
இது தவிர்த்து புயல் காரணமாக ஒன்பது நிலையங்களில் கூரைகள் மற்றும் உள்கூரைகள் சேதமடைந்தன. இதன் சேத மதிப்பு 559,000 வெள்ளியாகும். ஒரு இடத்தில் மரம் விழுந்ததால் 200,000 வெள்ளி அளவுக்கு சேதம் ஏற்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்று, இங்குள்ள கோல ஜெங்காய் போலீஸ் நிலையத்தில், வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிப் பொருள்களை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 12 காவல் துறை அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களைப் பெற்றனர்.
இதனிடையே, கடந்த நவம்பர் 19 முதல் டிச 8 வரை வடகிழக்கு பருவமழையின் போது மொத்தம் 3,024 குற்றச்செயல்களை காவல் துறை பதிவு செய்துள்ளது என்றும் அவர் சொன்னார்.
அந்த புகார்களில் 2,511 பொருள், வாகனத் திருட்டு மற்றும் வீடு புகுந்து கொள்ளையிடுவது போன்ற சம்பவங்களையும் மேலும் 513 புகார்கள் கொள்ளை, கொலை மற்றும் பாலியல் வன்புணர்வு தொடர்பான சம்பவங்களையும் உள்ளடக்கியுள்ளது என்றார் அவர்.


