கோலாலம்பூர், டிச 10 - சிறார்கள் மற்றும் இளம் பருவத்தினரிடையே மனநலம் குறித்து பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அரசு சாரா நிறுவனங்கள் (என்.ஜி.ஓ.) உள்ளிட்ட பங்களிப்பாளர்களுடன் விரிவான கலந்துரையாடல் நிகழ்வுகளை நடத்துவதில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருகிறது.
தங்கள் பிள்ளைகளுக்கு மனநலப் பிரச்சனை இருப்பது அடையாளம் காணப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாத மனப்போக்கு பெற்றோர்கள் மத்தியில் இன்னும் உள்ளது என்று துணை சுகாதார அமைச்சர் டத்தோ லுகானிஸ்மன் அவாங் சௌனி கூறினார்.
ஆலோசக சேவையின் போது சில பிள்ளைகளுக்கு குறிப்பாக ஆரம்பப் பள்ளிகளில் பயில்வோருக்கு மனநலப் பிரச்சினைகள் மற்றும் சமூகக் குறைபாடு இருப்பதை ஆசிரியர்கள் கண்டறிந்துள்ளனர். அதேசமயம் தங்கள் பிள்ளைகளை மருத்துவச் சோதனை மற்றும் சிகிச்சைக்காக சுகாதார நிலையங்களுக்கு அனுப்புவதை ஏற்க முடியாத நிலையில் பெற்றோர்கள் உள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
மக்களவையில் இன்று பண்டார் துன் ரசாக் உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிசா வான் இஸமாயில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மலேசியாவில் ஐந்து முதல் ஒன்பது வயது வரையிலான 424,000 சிறார்கள் மனநல பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக வெளியான அறிக்கை தொடர்பில் உருவாக்கப்பட்ட 2021-2025 தேசிய பாதுகாப்புக் கொள்கையின் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஆக்கத்தன்மை குறித்து வான் அஜிசா கேள்வியெழுப்பியிருந்தார்.
தகவல் மற்றும் அனுபவப் பகிர்வு அமர்வுகளின் போது மலேசியா கொண்டுள்ள மனநலத் திட்டங்கள் மற்றும் தொகுப்புகளை வெளிநாடுகள் பாராட்டியுள்ளன. ஆனால் இந்த விஷயத்தில் சமூகத்தினரிடையே புரிந்துணர்வை வலுப்படுத்துவதற்கான செயல்முறை இன்னும் குறைவாகவே உள்ளது என்று லுகானிஸ்மன் குறிப்பிட்டார்.
ஆகவே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் மனநலம் பற்றிய புரிதலை மேம்படுத்தும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.


