கோலாலம்பூர், டிச. 10 - நாட்டின் ஆறு மாநிலங்களில் நாளை மற்றும் வியாழக்கிழமை வரை கடுமையான தொடர் மழை பெய்யும் என வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.
திரங்கானு மாநிலத்தின் உலு திரங்கானு, மாராங், டுங்குன், கெமமான் ஆகிய மாவட்டங்களிலும் பகாங் மாநிலத்தின் ஜெராண்டூட், மாரான், குவாந்தான், பெக்கான், ரொம்பின் ஆகிய மாவட்டங்களிலும் நாளை மிகக் கடுமையான அடை மழை பெய்யும் என்று அத்துறையின் தலைமை இயக்குநர் டாக்டர் முகமது ஹிஷாம் முகமது அனிப் கூறினார்.
அதே சமயம், பெர்லிஸ் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் கெடா மாநிலத்தின் லங்காவி, குபாங் பாசு, கோத்தா ஸ்டார், பொக்கோ செனா, பாடாங் தெராப், பெண்டாங் சிக், பாலிங் ஆகிய மாவட்டங்களிலும் எதிர்வரும் வியாழன் வரை எச்சரிக்கை நிலையில் தொடர் மழை பெய்யும் என அவர் தெரிவித்தார்.
மேலும், பேராக் மாநிலத்தின் உலு பேராக், கோல கங்சார் மாவட்டங்களும் கிளந்தான் மாநிலம் முழுவதும் திரங்கானுவின் பெசுட், செத்தியு, கோல நுருஸ், கோல திரங்கானு ஆகிய மாவட்டங்களும் இதே வானிலையை எதிர் கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டார்.
பகாங் மாநிலத்தின் கேமரன் மலை, தெமர்லோ, பெரா ஆகிய பகுதிகளில் எச்சரிக்கை நிலையில் மழை நாளை வரை தொடர்ந்து பெய்யும் என்றார் அவர்.


