ஷா ஆலம், டிச. 10 - சுபாங் ஜெயாவிலுள்ள அழகு நிலையம் ஒன்றில்
அதிரடிச் சோதனை மேற்கொண்ட போது அங்கு சிகிச்சைப் பெற்றுக்
கொண்டிருந்த பாடகி ஒருவரை சுபாங் ஜெயா மாநகர் மன்ற அமலாக்கப்
பிரிவு உறுப்பினர்கள் படம் பிடித்த சம்பவத்திற்காக ஊராட்சி
மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சுயி லிம்
மன்னிப்பு கோரினார்.
தெளிவற்ற சீரான செயலாக்க நடைமுறை (எஸ்.ஓ.பி.) காரணமாக
ஊராட்சி மன்ற அதிகாரிகளுக்கும் அந்த பாடகிக்கும் இடையே ஏற்பட்ட
கருத்து வேறுபாட்டினால் இந்த சர்ச்சை எழுந்ததாக அவர்
தெளிவுபடுத்தினார்.
சம்பந்தப்பட்ட அழகு நிலையம் லைசென்ஸ் இன்றி செயல்பட்டு வந்த
தாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. தனது தன்மானம், உரிமை மற்றும்
கௌரவம் பாதிக்கப்பட்டதாக அந்த பாடகி கருதியிருக்கலாம். அதனால்
நான் நிலைமையை உணர்வதோடு அவரை குறை சொல்லவும்
விரும்பவில்லை என அவர் சொன்னார்.
நேற்று இங்கு நடைபெற்ற மதிப்பீட்டு வரி உயர்வு தொடர்பான
செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த பிரச்சனையை நிபுணத்துவ ரீதியாகவும் அமைதியான முறையிலும்
தீர்க்கப்படும் என உறுதியளிப்பதோடு இது போன்ற சம்பவங்கள்
நிகழாதிருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்
என அவர் கூறினார்.
அமலாக்க நடவடிக்கைகளின் போது அதிகாரிகள் உடல் கேமராக்களை
பொருத்தியிருப்பதை உறுதி நிபந்தனையாக்குவது குறித்து மாநில அரசு
பரிசீலித்து வருகிறது. நிதி வளத்தைப் பொறுத்தே இதன் அமலாக்கம்
அமையும் என்பதோடு இந்நடவடிக்கை சீராக முறையில் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய இது கட்டங் கட்டமாக அமல்படுத்தப்படும் என்றார் அவர்.
சுபாங் ஜெயாவிலுள்ள அழகு நிலையம் ஒன்றில் தாம் உடம்புபிடி
சிகிச்சையை மேற்கொண்ட காட்சியை சுபாங் ஜெயா மாநகர் மன்ற
அதிகாரிகள் இரகசியமாக படம் பிடித்ததாக பெண் பாடகி ஒருவர்
குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்படும் என்று
சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் வான் அஸ்லான் வான்
மாமாட் கூறினார்.


