ஷா ஆலம், டிச. 10 - புதிய மதிப்பீட்டு வரியின் மூலம் பெறப்படும் கூடுதல் வருமானம் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் பொது வசதி பராமரிப்புக்கான செலவினத்தை ஈடு செய்யப் பயன்படுத்தப்படும் என்று ஊராட்சி மன்றம், சுற்றுலா மற்றும் புதுகிராம மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சுயி லிம் கூறினார்.
குடியிருப்பு பகுதிகள் சுத்தமானதாகவும் பாதுகாப்பானதாகவும் வசிப்பதற்கு உகந்ததாகவும் இருப்பதை உறுதி செய்வதற்கு ஏதுவாக மதிப்பீட்டு வரியின் மூலம் கிடைக்கும் கூடுதல் வருமானம் சேவை வடிவில் மக்களுக்குத் திருப்பித் தரப்படும் என்று அவர் சொன்னார்.
பராமரிப்புச் செலவினம் தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு மாநில அரசு மதிப்பீட்டு வரியை மறுபரிசீலனை செய்யும் முடிவை எடுத்தது. இந்த முடிவு அவ்வளவு இலகுவாக எடுக்கப்படவில்லை என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.
இந்த மதிப்பீட்டு வரியை 25 விழுக்காட்டுக்கும் மேல் போகாத வகையில் மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. இதன் வழி சொத்து உரிமையாளர்களுக்கு 75 விழுக்காடு கழிவு வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
இன்று நாம் செலுத்தும் மதிப்பீட்டு வரி நாளைய தலைமுறைக்கான முதலீடாக அமையும். அவர்கள் சுபிட்சமான மற்றும் சுகமான வாழ்க்கையை அனுபவிப்பதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்று அவர் மேலும் சொன்னார்.
சிலாங்கூர் மாநிலத்திலுள்ள ஊராட்சி மன்றங்கள் 20 முதல் 40 ஆண்டுகளாக மதிப்பீட்டு வரியை மறு ஆய்வு செய்யவில்லை என்று மீடியா சிலாங்கூர் அண்மையில் கூறியிருந்தது.
காஜாங் நகராண்மைக் கழகம் 39 ஆண்டுகளாக (1985) மதிப்பீட்டு வரியை உயர்த்தவில்லை. கோல லங்காட் நகராண்மைக் கழகம் 37 ஆண்டுகளாகவும் (1987), செலாயாங் நகராண்மைக் கழகம் 32 ஆண்டுகளாகவும் (1989) மதிப்பீட்டு வரியை மறுஆய்வு செய்யவில்லை.
சுபாங் ஜெயா மாநகர் மன்றம், சுபாங் ஜெயா மற்றும் பண்டார் சன்வே ஆகிய இடங்களுக்கான மதிப்பீட்டு வரியை கடந்த 1992ஆம் ஆண்டு முதல் அதிகரிக்கவில்லை. யுஎஸ்ஜே, பூச்சோங், ஸ்ரீ கெம்பாங்கான், மற்றும் செர்டாங் ஆகிய பகுதிகளில் கடந்த 1996 முதல் அதாவது 28 ஆண்டுகளாக வரி உயர்வை அமல்படுத்தவில்லை.
உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் 28 ஆண்டுகளாகவும் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் 27 ஆண்டுகளாகவும் ஷா ஆலம் மாநகர் மன்றம் 18 ஆண்டுகளாகவும் வரியை உயர்த்தவில்லை.


