கோலாலம்பூர், டிச. 10 - நாட்டில் மருத்துவக் கட்டண உயர்வு மற்றும் 61 வது கூட்டரசு பிரதேச பொது மன்னிப்பு வாரியம் தொடர்பான முடிவில் அரச உரையின் பின் இணைப்பு சேர்ப்பு உள்ளிட்ட விவகாரங்கள் இன்றைய மக்களவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
இன்றைய நாடாளுமன்ற கேள்வி நேரத்தின் போது மருத்துவ பிரீமியத் தொகை 40 முதல் 70 விழுக்காடு அதிகரிக்கப்பட்டது மற்றும் உலகளாவிய நிலையில் மருத்துவச் செலவின அதிகரிப்பு சராசரி 5.6 விழுக்காடாக உள்ள நிலையில் மலேசியாவில் கடந்தாண்டு 12.6 விழுக்காடு அதிகரித்தது குறித்து பூலாய் தொகுதி பக்கத்தான் ஹராப்பான் உறுப்பினர் சுஹைசான் கையாட் பிரதமரிடம் வினவுவார் என நாடாளுன்ற அகப்பக்கத்தில் வெளியிடப்பட்ட இன்றைய கூட்ட நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் பொது மன்னிப்பு விண்ணப்பம் தொடர்பில் கடந்த ஜனவரி மாதம் 29ஆம் தேதி கூடிய கூட்டரசு பிரதேச மன்னிப்பு வாரியத்தின் 61 வது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பில் மாமன்னரின் பின் சேர்க்கப்பட்ட உத்தரவு இடம் பெற்றது தொடர்பில் கோத்தா பாரு உறுப்பினர் டத்தோஸ்ரீ தாக்கியுடின் ஹசான் எழுப்பும் கேள்விக்கு பிரதமர் பதிலளிப்பார்.
பெட்ரோலுக்கான இலக்கு மானிய அமலாக்கத்தின் போது பாதிக்கப்படும் தரப்பினருக்கு உதவிகள் கிடைப்பதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்து புத்ராஜெயா தொகுதி பெரிக்காத்தான் நேஷனல் உறுப்பினர் டாக்டர் ராட்ஸி ஜிடின் பொருளாதார அமைச்சரிடம் வினவுவார்.
முடத்தன்மைக்கு ஆளானவர்களுக்கு சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனம் கடந்தாண்டு வழங்கிய இழப்பீடு மற்றும் போலி இழப்பீட்டு கோரிக்கைகளைத் தடுப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து மனித வள அமைச்சரிடம் கோல பிலா தொகுதி தேசிய முன்னணி உறுப்பினர் டத்தோ அட்னான் அபு ஹசான் கேள்வி தொடுப்பார்.


