கோலாலம்பூர், டிச. 10- புத்ராஜெயா பிரிசிண்ட் 11 பகுதியில் நேற்று மாலை
பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 20
வாகனங்களின் உரிமையாளர்களுக்கு தலா 1,000 வெள்ளி உதவித் தொகை
வழங்கப்படுகிறது.
வெள்ளத்தைச் சமாளிக்கும் குறுகிய கால நடவடிக்கையாக 200 கார்களை
நிறுத்தும் வசதி கொண்ட தற்காலிக கார் நிறுத்துமிடத்தை புத்ராஜெயா
கழகம் ஏற்பாடு செய்யும் என்று பிரதமர் துறை அமைச்சர் (கூட்டரசு
பிரதேசம்) டாக்டர் ஜலிஹா முஸ்தாபா கூறினார்.
இந்த வெள்ளப் பிரச்சனைக்கு இரு வார காலத்தில் தீர்வு காணும்படி
புத்ராஜெயா கழகம் பணிக்கப்பட்டுள்ளதோடு வெள்ளம் ஏற்படும் பட்சத்தில்
பொது மக்கள் விரைந்து தங்கள் வாகனங்களை அப்புறப்படுத்துவதற்கு
ஏதுவாக எச்சரிக்கை ஒலி முறையைப் பொருத்தும்படியும் கேட்டுக்
கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
இந்த திட்டத்தை ‘இண்டர்நெட் ஆஃப் திங்ஸ்‘ (எல்ஓடி) முறையில்
அமல்படுத்தலாம். வடிகால்களில் நீர் மட்டத்தை அறிந்து கொள்வதற்கு
ஏதுவாக புத்ராஜெயா முழுவதும் உள்ள வடிகால்களின் பராமரிப்பு
பகுதிகளில் சென்சர் எனப்படும் நுண்உணர் கருவிகளைப் பொருத்தலாம்
என்றார் அவர்.
புத்ராஜெயாவில் வெள்ளம் ஏற்பட்டது தொடர்பான தகவல் லபுவான்
பயணம் மேற்கொண்டிருந்த போது தமக்கு தெரிவிக்கப்பட்டதாக அவர்
தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டார்.
அப்பகுதியில் வெள்ளம் ஏற்படுவது இதுவே முதன் முறை எனக் கூறிய
அவர், வழக்கத்தைக் காட்டிலும் இரு மடங்கு அதிக மழை பெய்ததே இந்த
வெள்ளத்திற்கு காரணமாகும் என்றார்.
இந்த திடீர் வெள்ளத்தில் 20 கார்கள் சேதமடைந்தன. இந்த வீடமைப்புப்
பகுதி மிகவும் பெரியது. சுமார் 2,500 வீடுகள் கொண்ட இப்பகுதியில்
கிட்டத்தட்ட 10,000 பேர் வசிக்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.


