லாபுவான், டிச. 9 - இங்குள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில் உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு நேற்று மேற்கொண்ட ஓப் திரிஸ் 3.0 - கித்தா கெம்புர் நடவடிக்கையின் போது 16,075 வெள்ளி மதிப்புள்ள மானிய விலை டீசலை ஏற்றிச் சென்ற உள்நாட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனம் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.
கூடுதல் டாங்கி பொருத்தப்பட்ட அந்த நான்கு சக்கர இயக்க வாகனத்தை அமைச்சின் அமலாக்க அதிகாரிகள் குழு காலை 9.49 மணிக்கு நிறுத்தி சோதனை செய்த போது மானியம் வழங்கப்பட்டதாக நம்பப்படும் 500 லிட்டர் டீசல் கண்டுபிடிக்கப்பட்டது என்று அமைச்சின் லபுவான் இயக்குநர் ஜூனைடா ஆர்பைன் கூறினார்.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் அந்த வாகனத்தின் ஓட்டுநரான 51 வயதான உள்ளூர் நபர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டார் என்று அவர் இன்று பெர்னாமாவிடம் கூறினார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் முதன் முறையாக குற்றம் புரியும் தனி நபர்களுக்கு பத்து லட்சம் வெள்ளி அபராதம், மூன்றாண்டு வரையிலானச் சிறை அல்லது இரண்டுமே விதிப்பதற்கும் இதே குற்றத்தை மீண்டும் புரியும் நிறுவனங்களுக்கு 20 லட்சம் வெள்ளி அபராதமும் விதிப்பதற்கும் வகை செய்யும் 1961 ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் பிரிவு 21 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.
பொதுமக்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் ஒரு வார காலமாக மேற்கொள்ளப்பட்ட உளவு நடவடிக்கையின் பலனாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.


