புத்ராஜெயா, டி. 9- நேற்று பிற்பகல் 4.00 மணிக்குத் தொடங்கி சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் இங்குள்ள பிரிசிண்ட் 11, மண்டலம் 4 ஏ பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக குறைந்தது 20 வாகனங்கள் நீரில் சிக்கின.
மாலை 4.44 மணிக்கு அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து நிலைமையைக் கண்காணிப்பதற்காக இரண்டு வண்டிகளில் 13 பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தாக புத்ராஜெயா கூட்டரசு பிரதேச தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் அப்துல் மனாஃப் சே இசா கூறினார்.
நீரை வெளியேற்றுவது மற்றும் அடைபட்ட கால்வாய்களை சுத்தம் செய்வது உள்ளிட்டப் பணிகளை தீயணைப்பு வீரர்கள் மேற்கொண்டனர்.
மாலை 5.30 மணியளவில் வெள்ளம் குறைந்துவிட்டது என்று அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
தற்போது லேசான மழை பெய்து வருவதால் தீயணைப்பு வீரர்கள் கண்காணித்து வருகின்றனர். மேலும்,
கண்காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி) மற்றும் புத்ராஜெயா மேம்பாட்டு மையம் (பிபிஜே) மூலம் வெள்ளம் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கான முயற்சியும் செயல்படுத்தப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.


