பட்டர்வொர்த், டிச.7- கடந்த ஆகஸ்டு மாதம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்தியா சென்றிருந்தபோது அந்நாட்டு அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தையின் விளைவாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியின் விலை சிறிதளவு குறைக்கப்பட்டுள்ளது.
மக்களின் சுமையை குறைப்பதில், குறிப்பாக அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்படுவதை உறுதி செய்வதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
அவர்கள் (இந்தியா) அரிசியை மலிவான விலையில் விற்க ஒப்புக்கொண்டனர். இந்த நடவடிக்கை சமூகத்தின் மீதான சுமையை குறைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று இன்று இங்குள்ள கம்போங் மஸ்ஜித் தீமாவில் மடாணி மலிவு விற்பனையைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் கூறினார்.
மலிவு விற்பனைத் திட்டத்தை ஏற்பாடு செய்வதன் மூலம் ஆரோக்கியமான போட்டியை உருவாக்க முடியும். இதன் வழி சந்தை விலையை குறைப்பதற்கான அழுத்தத்தை ஏற்படுத்தலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த ஒரு நாள் மடாணி மலிவு விற்பனையில் பொது மக்களுக்கு 1,000 கோழிகள் மற்றும் 200 பாக்கெட் அரிசி இலவசமாக வழங்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.
மேலும், மீன்பிடி படகுகளில் இருந்து நேரடியாக எடுக்கப்படுவதால் சந்தையை விட மலிவான விலையில் புதிய மீன்களையும் வாடிக்கையாளர்கள் வாங்க முடியும் என்றார் அவர்.
இடைத்தரகர்கள் இல்லாமல் மீனவர்களிடம் இருந்து நேரடியாகப் பெற்றால் குறைந்த விலையில் புதிய மீன்களைப் பெறலாம். அதனால்தான் இது தொடர்பான செலிகளைப் பயன்படுத்த மீனவர்களை ஊக்குவிக்கிறோம். இதன் மூலம் பொதுமக்கள் அவர்களிடமிருந்து நேரடியாக கடல் உணவுப் பொருள்களை வாங்க முடியும். சந்தையில் ஆரோக்கியமான போட்டி உருவாகவும் இது வழி வகுக்கும் என அவர் தெரிவித்தார்.


