கோலாலம்பூர், டிச. 7- மதுபோதையில் காரை ஓட்டிய குற்றத்தை ஒப்புக்
கொண்ட பயன்படுத்தப்பட்ட கார் விற்பனையாளர் ஒருவருக்கு இங்குள்ள
மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஒரு நாள் சிறைத்தண்டனையும் 10,000 வெள்ளி
அபராதமும் விதித்தது.
எஸ். யோகேஸ் (வயது 27) என்ற அந்த இளைஞருக்கு எதிரான
சிறைத்தண்டனை உடனடியாக அமலுக்கு வருவதாக தனது தீர்ப்பில்
கூறிய மாஜிஸ்திரேட் ஹனீபா அரிபின், அபராதத் தொகையைச்
செலுத்தத் தவறினால் ஐந்து மாதச் சிறைத்தண்டனையை அனுபவிக்கவும்
உத்தரவிட்டார்.
மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவரின் வாகனமோட்டும் லைசென்சை
ஈராண்டுகளுக்கு முடக்குவதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த ஜூலை மாதம் 10ஆம் தேதி விடியற்காலை 2.35 மணியளவில்
ஜாலான் ஆராவில் அனுமதிக்கப்பட்ட 100 மில்லிகிராம் இரத்தத்தில் 50
மில்லிகிராம் மது என்ற அளவைத் தாண்டி அதிக போதையில்
வாகனத்தைச் செலுத்தியதாக யோகேஸ் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் ஈராண்டுச் சிறை மற்றும் 30,000
வெள்ளி வரையிலான அபராதம், ஈராண்டுகளுக்கு குறையாத காலத்திற்கு
வாகனமோட்டும் லைசென்ஸ் முடக்கம் அல்லது பெறுவதற்கு தடை
விதிக்க வகை செய்யும் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச்
சட்டத்தின் 45ஏ(1)வத பிரிவின் கீழ் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு படிப்பினையை வழங்கும் வகையில்
அதிகப்பட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என அரசுத் தரப்பு
வழக்கறிஞர் சல்சாபிலா முகமது நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்ட
வேளையில் தனது கட்சிக்காரர் குடும்பத்தைப் பராமரிக்கும் பொறுப்பில் உள்ளதால் அவருக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்
என எதிர்த்தரப்பு வழக்கறிஞர் சரப்பான் சிங் கேட்டுக் கொண்டார்.


