கோலாலம்பூர் டிச. 7- நாட்டிலுள்ள ஆறு மாநிலங்களில் வெள்ளம்
நிலைமை சீரடைந்து வருகிறது. வெள்ள நிவாரண மையங்களில்
தங்கியுள்ளவர்கள் எண்ணிக்கையும் நேற்று இரவுடன் ஒப்பிடுகையில்
இன்று காலை குறைந்துள்ளது.
வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான கிளந்தானில்
வெள்ளம் வடியத் தொடங்கியுள்ள நிலையில் இன்று காலை நிலவரப்படி
அங்கு இன்னும் செயல்பட்டு வரும் 18 நிவாரண மையங்களில் 6,269 பேர்
தங்கியுள்ளனர்.
கெடா மாநிலத்தில் நேற்றிரவு 642 குடும்பங்களைச் சேர்ந்த 2,131 பேராக
இருந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று காலை 566
குடும்பங்களைச் சேர்ந்த 1,865 பேராக குறைந்துள்ளது.
ஜோகூர் மாநிலத்திலும் வெள்ளம் படிப்படியாக வடிந்து வருகிறது. இதன்
எதிரொலியாக சிகாமாட், கம்போங் பாலாய் பாடோங்கில் உள்ள ஒரு
துயர் துடைப்பு மையம் நேற்று மூடப்பட்டது. இன்று காலை நிலவரப்படி
அம்மாநிலத்தில் 521 பேர் நிவாரண மையங்களில் அடைக்கலம்
நாடியுள்ளனர்.
அவர்கள் அனைவரும் சிகாமாட், பத்து பஹாட் மற்றும் தங்காக் ஆகிய
மாவட்டங்களில் உள்ள 14 துயர் துடைப்பு மையங்களில் தங்க
வைக்கப்பட்டுள்ளனர்.
பேராக் மாநிலத்தின் கிந்தா மற்றும் பேராக் தெங்கா மாவட்டங்களில்
திறக்கப்பட்டுள்ள மூன்று துயர் துடைப்பு மையங்களில் 43 குடும்பங்களைச்
சேர்ந்த 129 பேர் தங்கியுள்ளனர்.
மலாக்கா மாநிலத்தில் வெள்ள நிலைமையில் மாற்றமில்லை. ஜாசின்
மாவட்டத்தில் உள்ள இரு நிவாரண மையங்களில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 123 பேர் அடைக்கலம் பெற்றுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைச் செயலகம் கூறியது.
பகாங் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை
தொடர்ந்து 13 பேராக இருந்து வருகிறது. நான்கு குடும்பங்களைச் சேர்ந்த
அவர்கள் அனைவரும் மாரானில் உள்ள ஒரு துயர் துடைப்பு மையத்தில்
தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


