புத்ராஜெயா, டிச. 6 - வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடுகளைத்
துப்புரவுச் செய்வது, தேவையான பொருள்களைக் கொண்டுச் செல்வதற்கு
தன்னார்வலர்களையும் தளவாடங்களையும் சாலை போக்குவரத்து இலாகா
(ஜே.பி.ஜே.) ஏற்பாடு செய்துள்ளது.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் துப்புரவுப் பணிகளில் உதவ 400
தன்னார்வலர்களையும் லோரி, நான்கு சக்கர இயக்க வாகனங்கள்
உள்ளிட்ட 80 பல்வேறு உபகரணங்களையும் ஜே.பி.ஜே. ஏற்பாடு
செய்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது.
கிளந்தான் மாநிலத்தின் கோத்தா பாருவில் உள்ள கிழக்கு
பிராந்தியத்திற்கான ஜே.பி.ஜே. அகாடமி போன்ற சாலை போக்குவரத்து
இலாலாவின் வசதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்
பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார அமைச்சின் பணியாளர்களுக்கான பணி
முகாமாக செயல்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.
போக்குவரத்து அமைச்சின் கீழுள்ள அந்த அமைப்பு வெள்ளத்தில்
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை
கடந்த வாரம் தொடங்கி இன்று வரை மேற்கொண்டு வருகிறது.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக போக்குவரத்து
அமைச்சு 2024 மடாணி ஏஹ்சான் உதவி நிதி திட்டத்தை
தொடக்கியுள்ளதோடு அமைச்சு நிலையிலான வெள்ள பேரிடர்
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக கடந்த
டிசம்பர் 2ஆம் தேதி முதல் மடாணி ஏஹ்சான் நடவடிக்கை அறையையும்
திறந்துள்ளது.
போக்குவரத்து சீராக இருப்பதை உறுதி செய்வதற்கு ஏதுவாக பயணம்
தொடர்பான சமீபத்திய தகவல்களை புதுப்பித்துக் கொள்ளும்படி நடத்துநர்களை அபாட் எனப்படும் தரைப் போக்குவரத்து நிறுவனம் கேட்டுக் கொண்டது.


