கோலாலம்பூர், டிச. 6 - இவ்வாண்டும் அடுத்தாண்டும் முக்கிய பண்டிகை காலங்களில் தீபகற்ப மலேசியாவில் இருந்து சபா, சரவாக் மற்றும் லாபுவான் நகரங்களுக்கான ஒரு வழி விமான டிக்கெட்டுகளை வாங்குவதற்கு போக்குவரத்து அமைச்ச தொடர்ந்து மானியம் வழங்கும்.
இந்த மானியம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கும், அடுத்தாண்டு சீனப் புத்தாண்டு, நோன்புப் பெருநாள், கமாத்தான், காவாய் பண்டிகை மற்றும் கிறிஸ்துமஸ் விழாக்களுக்கும் வழங்கப்படும் என்று அமைச்சு தெரிவித்தது.
தீபகற்ப மலேசியாவை சபா, சரவாக் மற்றும் லாபுவானுடன் இணைக்கும் உள்நாட்டு வழித்தடங்களில் ஒவ்வொரு பயணிக்கும் ஒரு வழி விமான டிக்கெட்டுகளுக்கு மானியம் வழங்குவதன் மூலம் இந்த முன்னெடுப்பு மேம்படுத்தப்படும்.
தீபகற்ப மலேசியா மற்றும் சபா, சரவாக், லாபுவான் இடையிலானப் பயணத்திற்கு 499 வெள்ளி கட்டணம் விதிக்கப்படுகிறது.இந்த விலையில் வரிகள் மற்றும் கட்டணங்கள் உள்ளடங்கவில்லை. அதிகபட்ச வரம்பு விலையான 599 வெள்ளியை விட இது குறைவு ஆகும் என்று அது நேற்று ஒரு அறிக்கையில் கூறியது.
அசல் டிக்கெட் விலைக்கும் அதிகபட்ச விலைக்கும் இடையே உள்ள வித்தியாசத் தொகையை அரசாங்கம் செலுத்தும்.
முக்கிய பண்டிகைகளுக்கான இந்த முன்னெடுப்பின் அமலாக்க காலம் மூன்று நாட்களில் இருந்து நான்கு நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.
குறிப்பாக கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது டிசம்பர் 21-24 வரை, சீன புத்தாண்டின்போது ஜனவரி 25-28, 2025 வரை, நோன்புப் பெருநாளின்போது மார்ச் 27-30 வரை இந்த கட்டண முறை அமலில் இருக்கும்.


