புத்ராஜெயா, டிச 6: புத்ராஜெயா பிரின்சிட் 8இல் உள்ள குவார்ட்டர்ஸ் கட்டிடத்தில் சாயம் அடிக்கும் போது கிரேன் ஒன்று விழுந்ததால் இந்தோனேசியாவைச் சேர்ந்த 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மற்றொருவர் படுகாயமடைந்தார்
காலை 9.20 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் கட்டிடத்திற்கு சாயம் அடிக்க கிரேனின் 'பக்கெட்'டில் இருந்த 3 பேரும் கிரேன் கவிழ்ந்ததில் கட்டிடத்தின் ஏழாவது மாடியிலிருந்து கீழே விழுந்தனர்.
உயிரிழந்தவர்கள் சுகாவன் வில்கான் (54), மற்றும் டானியாண்டோ யூசக் (53) என அடையாளம் காணப்பட்டதாகவும் மற்றும் யாசின் (56) பலத்த காயமடைந்ததாகவும் புத்ராஜெயா மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி ஐடி ஷாம் முகமட் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காகப் புத்ராஜெயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது என்றார்.
இதற்கிடையில், காலை 9.30 மணிக்கு அவசர அழைப்பு வந்ததையடுத்து,தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களின் 15 உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என புத்ராஜெயா தீயணைப்பு இயக்குனர் அப்துல் மனாஃப் சே இசா கூறினார்.
“பாதிக்கப்பட்டவர்களை ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறையினர் வாகனங்களில் ஏற்றிச் செல்ல, சுகாதார அமைச்சகம் மற்றும் காவல்துறைக்கு உறுப்பினர்கள் உதவினார்கள் என்றார்.
"வழக்கின் விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது," என்று அவர் கூறினார், சம்பவ இடத்தில் மீட்பு நடவடிக்கை 10.57 மணிக்கு முடிந்தது.


