NATIONAL

கோலோக் விவகாரத்தில் சிக்கிய போலீஸ்காரர்கள் போதைப் பொருள் துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டது கண்டுபிடிப்பு

6 டிசம்பர் 2024, 2:39 AM
கோலோக் விவகாரத்தில் சிக்கிய போலீஸ்காரர்கள் போதைப் பொருள் துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டது கண்டுபிடிப்பு

கோலாலம்பூர், டிச. 6 - தாய்லாந்து நாட்டின் கோலோக் நகரில் பொழுது போக்கு மையத்தில் உல்லாசமாக பொழுது போக்கியது கண்டுபிடிக்கப்பட்ட மூன்று போலீஸ்காரர்கள் போதைப் பொருள் துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டது தெரியவந்துள்ளதாக கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமது யூசுப் மாமாட் கூறினார்.

இவ்விரு வழக்குகள் தொடர்பிலும் போலீசார் பல்வேறு கோணங்களில் வெளிப்படையான விசாரணையை மேற்கொள்வர் என்று அவர் சொன்னார்.

தனது அதிகாரத்திற்கு கீழ் உள்ள அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதில் ஒருபோதும் விட்டுக் கொடுக்கும் போக்கு கடைபிடிக்கப் படாது என்றும் அவர் தெரிவித்தார்.

தாய்லாந்து நாட்டின் கோலோக்கில் உள்ள உல்லாச விடுதிக்குச் சென்றதன் மூலம் மூன்று போலீஸ்காரர்கள் நடத்தை மீறலில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரசாருடின் ஹூசேன் நேற்று கூறியிருந்தார்.

சார்ஜன் மேஜர், கார்ப்ரல் மற்றும் லான்ஸ் கார்ப்ரல் பதவிகளை வகிக்கும் 26 முதல் 32 வயது வரையிலான அந்த மூன்று போலீஸ்காரர்களும் கிளந்தான் மாநில போலீஸ் தலைமையகத்தின் உயர்நெறி மற்றும் தரக் கண்ணிப்பு துறையின் (ஜிப்ஸ்) விசாரணைக்கும் உட்படுத்தப் படுவர் என்றும் அவர் சொன்னார்.

அந்த மூவரில் ஒருவர் பாசீர் மாஸ் மாவட்ட உயர்நெறி மற்றும் தரக் கண்காணிப்பு பிரிவிலிருந்து கிளந்தான் மாநில போலீஸ் தலைமையகத்தின் கமாண்டன் முகாமுக்கு மாற்றப்பட்ட வேளையில் மேலும் இருவர் கிளந்தான் மாநிலத்திற்கு வெளியே பணியிட மாற்றம் செய்யப்படுவர் என்று அவர் குறிப்பிட்டார்.

சட்டவிரோத வழித்தடங்கள் வாயிலாக கோலோக் சென்ற அந்த மூன்று போலீஸ்காரர்களும் அங்குள்ள பொழுது போக்கு மையங்களில் உல்லாசமாக பொழுது போக்கியதை சித்தரிக்கும் புகைப்படம் மற்றும் காணொளி மாநில போலீஸ் தலைமையகம் கடந்த மாதம் 10ஆம் தேதி பெற்றதாக கூறிய அவர், அம்மூவரும் சட்டவிரோத வட்டி முதலைகளுடன் தொடர்பையும் கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.