ஷா ஆலம், டிச. 6 - அந்நியத் தொழிலாளர்களைச் பெரிதும் சார்ந்திருக்கும்
பிரச்சனைக்கு அரசாங்கம் தீர்வு காண வேண்டும் என்று பேங்க் நெகாரா
முன்னாள் கவர்னர் டான்ஸ்ரீ முகமது இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
உற்பத்தி, கட்டுமானம் மற்றும் தோட்டத் தொழில் உள்ளிட்ட துறைகளின்
வாயிலாக நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அந்நியத் தொழிலாளர்கள்
பங்களிப்பை வழங்கிய போதிலும் அவர்களை பெரிதும் சார்ந்திருக்கும்
போக்கு விரிவான விளைவுகளையும் கொண்டுள்ளது என்று அவர்
சொன்னார்.
வெளிநாட்டுத் தொழிலாளர்களை அதிகம் சார்ந்திருப்பது உற்பத்தித்
திறனை தேக்கமடையச் செய்வதோடு குறைந்த திறன் கொண்ட
தெழிலாளர்களுக்கான வாய்ப்புகள் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்
துறைகளில் முதலீடுகளை ஊக்குவிக்காமல் போகும் சாத்தியத்தையும்
கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
உயர் வருமானம் கொண்ட நாடாக உருவாகும் மலேசியாவின்
முயற்சிக்கு இது தடையாக உள்ளது. வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும்
பணத்தின் அளவும் கவலையளிக்கும் வகையில் உள்ளது. வெளிநாட்டுத்
தொழிலாளர்கள் அதிகப் பணத்தை தங்கள் சொந்த நாட்டிற்கு அனுப்புவது
பணம் செலுத்தும் முறையில் சமநிலையின்மையை ஏற்படுத்துகிறது.
நாட்டிலிருந்து வெளியேறும் தொகையின் மதிப்பு 4,000 கோடி வெள்ளி என
மதிப்பிடப்படுகிறது. அந்தப் பணத்தை உள்நாட்டிலேயே முதலீடு செய்தால்
நாட்டின் பொருளாதாரத்தை இன்னும் வலுப்படுத்த முடியும் என்று அவர்
அவர் கூறினார்.
நேற்று இங்குள்ள சிலாங்கூர் பல்கலைக்கழகத்தில் (யுனிசெல்)
கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்ற போது அந்த பல்கலைக்கழகத்தின்
இணை வேந்தருமான அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கீழ் நிலை மற்றும் பகுதி திறன் பெற்ற தொழிலாளர்களின் சம்பளமும்
மற்றொரு பிரச்சினையாக விளங்குகிறது என்று முகமது தெரிவித்தார்.
இப்போது அதிகமான வீட்டுப் பணிப்பெண்களும் அந்நியத்
தொழிலாளர்களும் வருமானம் தேடி மலேசியா வருகின்றனர். அதே
சமயம் எதிர்காலத்தில் நமது பிள்ளைகள் வெளிநாடுகளில் கூலித்
தொழிலாளர்களாக வேலை செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று
அவர் சொன்னார்.
இது உண்மை.. இப்போது வேண்டுமானால் அதன் தாக்கம்
தெரியாமலிருக்கலாம். ஆனால், உரிய மாற்றங்கள் செய்யப்படாவிட்டால்
அடுத்த 30 ஆண்டுகளில் நமது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும்
வெளிநாடுகளில் கூலித் தொழிலாளர்களாக இருப்பர் என்றார் அவர்.


