கோலாலம்பூர், டிச. 5 - சிலாங்கூர் எஃப்.சி. கால்பந்து வீரர் முகமது ஃபைசால் அப்துல் ஹலீம் மீதான எரிதிராவக வீச்சு வழக்கை விரைந்து தீர்க்குமாறு அதிகாரிகளை சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் வலியுறுத்தியுள்ளார்.
வழக்கு தாமதமாவது குறித்து மிகுந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்திய சிலாங்கூர் சுல்தான், வழக்கு "எளிமையானது மற்றும் தெளிவானது" என்று கூறினார்.
சமூக ஊடகங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பத்தால் எதையும் மறைக்க முடியாது. நான் மாநில சட்டசபையில் வழக்கு தொடர்பான விவாதங்களை தொடர்ந்து கவனித்து வந்தேன். எப்படியாவது இது விரைவில் தீர்க்கப்படும் என்று நம்புகிறேன்.
இது ஒரு தெளிவான வழக்கு. மேலும் இந்த சம்பவம் முகமது ஃபைசாலின் வாழ்க்கையை அழித்துவிட்டது என்று தி ஸ்டார் பத்திரிக்கைக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் அவர் தெரிவித்தார்.
இந்த எரிதிராவக வீச்சு தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதை தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹூசேன் கடந்த நவம்பர் 29ஆம் தேதி உறுதிப்படுத்தினார்.
இந்த வழக்கு தொடர்பில் இதுவரை போலீசார் மூன்று பேரை தடுத்து வைத்து மேலும் 23 பேரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். ஆனால் சந்தேக நபர்களை குற்றத்துடன் தொடர்புபடுத்துவதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
புக்கிட் அமானின் சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்த வழக்கை எடுத்துக் கொண்டதாக மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்ததாக நவம்பர் 25ஆம் தேதி சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் கூறப்பட்டது.
"மிக்கி" என்று பிரபலமாக அழைக்கப்படும் 26 வயதான ஃபைசால் கடந்த மே 5 ஆம் தேதி பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு வெளியே அடையாளம் தெரியாத ஆசாமிகளால் எரிதிராவகத் தாக்குதலுக்கு ஆளானார்.
இந்த வழக்கின் பின்னணியில் ஒரு மர்மக் கரம் இருப்பதாக நீங்கள் நம்புகிறீர்களா? என்று கேட்டதற்கு, சரியாகச் சொல்வதானால், எங்கோ ஒரு ரிமோட் கண்ட்ரோல் (தொலைக் கட்டுப்பாட்டுக் கருவி) உள்ளது. ஆனால் நான் எந்த தரப்பினரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை என்று சுல்தான் பதிலளித்தார்.


