கோலாலம்பூர், டிச.5 - ஊழியர் சேம நிதிக்கு (இ.பி.எஃப்.) வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பங்களிப்பை வழங்கும் திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்துவது குறித்து அரசாங்கம் விரிவான ஆய்வை மேற்கொண்டு வருவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட தரப்பினரின் அனைத்து கருத்துக்களை கவனத்தில் எடுத்துக்கொள்வதன் மூலம் கொள்கைகள் முழுமையானவையாக இருப்பதை உறுதிப்படுத்த பல்வேறு பங்களிப்பாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வுகள் நடத்தப்படுத்தப்பட்டு வருவதாக அது கூறியது.
அனைத்து தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு, அனைத்துலகத் தரத்திற்கு ஏற்ப இருப்பதை உறுதி செய்வதன் மூலம் தொழிலாளர் சந்தையில் நேர்மையை மேம்படுத்துவதை இந்த முன்னெடுப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது அமைச்சு கூறியது.
உள்ளூர் வணிகங்களின் போட்டித்திறனை அதிகரித்து தானியங்கி முறைக்கு வணிகங்கள் மாற்றுவதை இந்த முன்னெடுப்பு ஊக்குவிக்கும். அதே சமயம் வெளிநாட்டு தொழிலாளர்களை சார்ந்திருப்பதையும் குறைக்க இயலும் என என்று அது கூறியது.
மேலவையில் செனட்டர் டத்தோ கோ நை வோங் எழுப்பிய கேள்விக்கு வழங்கிய எழுத்துப்பூர்வ பதிலில் அமைச்சு இதனைக் குறிப்பிட்டது. இந்த பதில் நாடாளுமன்ற இணையத்தளத்தில் இடம் பெற்றுள்ளது.
வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான கட்டாய இ.பி.எஃப். பங்களிப்பு பரிந்துரை குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு சுமையாக இருக்கும் என்று செனட்டர் கோ கூறியிருந்தார்.


