ஜெனீவா, டிச. 5 - எதிர்வரும் ஜனவரி 20ஆம் தேதி தாம் அதிபராக பதவியேற்கும் முன் காஸாவில் போர்நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் விரும்புகிறார் என கட்டார் பிரதமர் தெரிவித்ததாக அனடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.
தனது பதவிப் பிரமாணச் சடங்கிற்கு முன்பாக பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேலின் போரை முடிவுக்கு கொண்டு வரும் தனது நோக்கத்தை டீரம்ப் தெளிவாகக் கூறியதாக பிரதமர் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜாசிம் அல்-தானி குறிப்பிட்டார்.
அவரது குழுவினரிடமிருந்து இதை நாங்கள் கேட்டோம். நான் அவர்களுடன் உரையாடியதை நினைவு கூர்கிறேன். இதனை இப்போதே, முடிந்தால் இன்றே தீர்க்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள் என்று அவர் கூறினார்.
முடிந்தவரை இந்த அமைதி முயற்சி செயல்முறையைப் பாதுகாப்பதற்காக பல விவரங்களைப் பகிர்ந்து கொள்ள நான் விரும்பவில்லை என்று பேச்சுவார்த்தைகளில் ஒரு முக்கிய நபராக விளங்கும் கட்டார் பிரதமர் தெரிவித்தார்.
நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்து வருகிறோம். அதிபர் (ட்ரம்ப்) அலுவலகத்திற்கு வருவதற்கு முன்பு நிலைமையை சமாளிக்க நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். ஏனென்றால் நிலைமையை உறுதிப்படுத்த எங்களுக்கு முன்னுரிமைகள் உள்ளன. பிராந்திய பாதுகாப்பை மீட்டெடுப்பதற்கும் எங்களிடம் முன்னுரிமைகள் உள்ளன என்று அவர் மேலும் கூறினார்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான காஸா போர் நிறுத்தம் மற்றும் கைதிகளை பரிமாறிக் கொள்வதற்கான அமெரிக்கா, எகிப்து மற்றும் கத்தார் தலைமையிலான சமரச முயற்சிகள் நெதன்யாகு போரை நிறுத்த மறுத்ததால் தோல்வியடைந்தன.
கடந்த அக்டோபர் மாதம் முதல் காஸா பகுதியில் இஸ்ரேல் இனப்படுகொலைப் போரைத் தொடங்கியது. இதில் இதுவரை 44,530 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் 105,500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் சிறார்களாவர்.


