கோலாலம்பூர், டிச. 5 - ஊழலுக்கு எதிராக துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட
வேண்டும் என்பதோடு குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையும்
வழங்கப்பட வேண்டும் என்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான்
ஷராபுடின் இட்ரிஸ் ஷா வலியுறுத்தியுள்ளார்.
ஊழல் வழக்குகளை விரைவுபடுத்துவதற்கு ஏதுவாக சிறப்பு நீதிமன்றங்கள்
அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
நீதிமன்ற வழக்குகளில் தாமதம் ஏற்படாமலிருந்தால் ஊழல்
குற்றங்களுக்கு எப்போதோ தீர்வு காணப்பட்டிருக்க முடியும் என தி ஸ்டார்
நாளேட்டிற்கு வழங்கிய சிறப்பு பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.
வழக்குகள் தாமதமான காரணத்தால் ஊழல் குற்றங்கள் அரசாங்கச்
சேவையில் ஒரு நோயாக பரவி விட்டது என்று அவர் சொன்னார்.
சில வழக்குகளுக்குத் தீர்வு காண நீண்ட காலம் பிடிப்பதைச்
சுட்டிக்காட்டிய அவர், சிறப்பு நீதிமன்ற உருவாக்கமும் கடுமையான சட்ட
அமலாக்கமும் ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு சரியான தீர்வை
கொண்டு வரும் என்றார்.
ஊழலில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட
வேண்டும். தண்டனை கடுமையாக இல்லாத பட்சத்தில் எந்த பயனும்
ஏற்படாது என்றார் அவர்.
வியட்னாம் மற்றும் சீனாவைப் பாருங்கள். ஊழல் நிகழ்ந்தால் சுட்டுத்
தள்ளிவிடுவார்கள். குற்றம் புரிந்தவர்களைக் கொன்று விடுவார்களே தவிர
20 அல்லது 30 ஆண்டுகள் சிறையில் தள்ளமாட்டார்கள். முன்பை விட
அதிகரித்து வரும் ஊழல் சம்பவங்கள் கவலையளிக்கும் வகையில்
உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
தங்களின் மேல் நிலை அதிகாரிகளின் நேர்மையற்றப் போக்கை கீழ் நிலை
ஊழியர்களும் பின்பற்றத் தொடங்கும் போது ஊழல் மேலும்
மோசமடையும் என்று அவர் எச்சரித்தார்.


