கோலாலம்பூர், டிச. 5 - கஸானா நேஷனல் பெர்ஹாட் (கஸானா) மற்றும்
பெர்மோடலான் நேஷனல் பெர்ஹாட்டின் (பி.என்.பி.) சுமார் 80 லட்சம்
வெள்ளி முதலீட்டு நிதியை மோசடி செய்ததாக ஃபேஷன் வேலேட் சென்.
பெர்ஹாட் நிறுவனத்தின் நிறுவனர் டத்தின் விவி யூசுப் மற்றும் அவரின்
கணவர் டத்தோ ஃபஸாருடின் ஷா அனுவார் மீது இங்குள்ள செஷன்ஸ்
நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
நீதிபதி ரோஸ்லி அகமது முன்னிலையில் தங்களுக்கு எதிராக கூட்டாக
வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை விவி சோபியான்ஸ் யூசுப் (வயது 37)
மற்றும் ஃபஸாருடின் (வயது 36) ஆகிய இருவரும் மறுத்து விசாரணை
கோரினர்.
ஃபேஷன் வேலேட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 80 லட்சம் வெள்ளித்
தொகையை அந்நிறுவன இயக்குநர் வாரியத்தின் ஒப்புதல் இன்றி 30
மேப்பல் சென். பெர்ஹாட் என்ற நிறுவனத்திற்கு மாற்றியதன் மூலம்
கஸானா மற்றும் பி.என்.பி. நிறுவனங்கள் வழங்கிய அந்த முதலீட்டு
நிதியை நம்பிக்கை மோசடி செய்ததாக அவர்களுக்கு எதிரான
குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 21ஆம் தேதி பிளாசா புக்கிட்
டாமன்சாராவிலுள்ள பப்ளிக் வங்கியில் இக்குற்றத்தைப் புரிந்ததாக
அவர்கள் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
தண்டனைச் சட்டத்தின் 49வது பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அதே
சட்டத்தின் 409வது பிரிவின் கீழ் அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு
கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சட்டப்பிரிவின் கீழ் குற்றம்
நிரூபிக்கப்பட்டால் அத்தம்பதியருக்கு கூடுதல் பட்சம் 20 ஆண்டுகள்
வரையிலான சிறை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
குற்றஞ்சாட்டப்பட்ட இருவரையும் ஒரு நபர் உத்தரவாதத்துடன் தலா
100,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க அனுமதி வழங்கி நீதிபதி, கூடுதல்
நிபந்தனையாக அவர்கள் ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்தில்
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் கோலாலம்பூர் அலுவலகத்தில்
ஆஜராக வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார்.
மேலும், அவ்விருவரும் தங்கள் அனைத்துக கடப்பிதழ்களை
நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பதோடு வழக்கு முடியும் வரை
சாட்சிகளை தொந்தரவு செய்யக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் மறு விசாரணை அடுத்தாண்டு ஜனவரி மாதம் 22ஆம்
தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


