கோலாலம்பூர், டிச 5 : நாட்டில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், உணவில் சர்க்கரை அளவைக் குறைப்பதற்கான தனது பரிந்துரையை அனைத்துத் தரப்பினரும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டு கொண்டார்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள நாடுகளில் மலேசியாவும் ஒன்று என்று நிதியமைச்சர் அன்வார் கூறினார்.
"உணவில் சர்க்கரை அளவை குறைப்பதே இந்த பிரச்சனைக்கு ஒரு சிறந்த தீர்வாக இருக்கும் என்று நம்புகிறேன்.
அடுத்த ஜனவரி முதல் சர்க்கரை பானங்களுக்கான கலால் வரியை லிட்டருக்கு 40 காசுகள் கட்டம் கட்டமாக உயர்த்தும் அரசாங்கத்தின் நடவடிக்கையால் மட்டும் இதை குறைக்க முடியாது என தேசிய விநியோக மசோதா 2025 இன் இரண்டாம் வாசிப்பை முன்வைக்கும் போது அவர் கூறினார்.
எனவே, நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள உணவு வளாகங்கள், வழங்கப்படும் பானங்களில் உள்ள சர்க்கரையின் அளவை 50 சதவீதம் வரை குறைக்க வேண்டும் என்று அன்வார் பரிந்துரைத்தார்.
"சர்க்கரை அளவை 50 சதவிகிதம் குறைக்கும் பிரதமர் துறை என்ன செய்திருக்கிறதோ அதையே நாடாளுமன்றத்தில் உள்ள சிற்றுண்டி சாலையில் பின்பற்ற வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். இது பொருத்தமானது, ஏனெனில் உறுப்பினர்கள் சிறந்த முன்மாதிரியாக இருக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து, ஒவ்வொரு புதன்கிழமையும் சர்க்கரை இல்லாத நாள் திட்டத்தை மக்களவை ஆரம்பித்ததாக ஊடகங்கள் முன்பு தெரிவித்தன. இது ஆரோக்கியமான வாழ்க்கை முறை கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளடக்கியது என தெரிவிக்கப்பட்டது.
– பெர்னாமா


